×

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் 8 நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நேற்று பதவி ஏற்றனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சென்னை  உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக 2020 டிசம்பர் 3ம் தேதி  ஜி.சந்திரசேகரன், நக்கீரன், வி.சிவஞானம், ஜி.இளங்கோவன், எஸ்.ஆனந்தி, எஸ்.கண்ணம்மாள், எஸ்.சத்திகுமார், கே.முரளிசங்கர், ஆர்.என்.மஞ்சுளா, டி.வி.தமிழ்ச்செல்வி  ஆகிய 10 பேர் பதவி ஏற்றனர். இரண்டு ஆண்டுகள் கூடுதல் நீதிபதியாக பணியாற்றிய  இவர்களில் நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் தவிர 9 பேரை நிரந்தரம் செய்து உச்ச நீதிமன்றம் ஜனாதிபதிக்கு கடந்த மாதம்  பரிந்துரை செய்தது. இதற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, நீதிபதிகள் 9 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்யும் நிகழ்ச்சி உயர் நீதிமன்றத்தில் நேற்று காலை நடந்தது. நீதிபதி சத்திகுமார் தவிர 8 நீதிபதிகள் பதவி ஏற்றனர். 8 பேருக்கும் தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத்  பண்டாரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்ற  நீதிபதிகள் முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன், மனைவி ஆவார்கள். பதவியேற்பு நிகழ்ச்சியில் நிரந்தர நீதிபதிகள் 8 பேரையும் வரவேற்று தமிழக  அரசின் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம் வாழ்த்தி பேசினார். நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், பதிவாளர்கள், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தலைவர்  ஜி.மோகனகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நீதிபதிகளை வாழ்த்தினர். நீதிபதி ஜி.சந்திரசேகரன் 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வாகி சேலம், ஸ்ரீவில்லிபுத்தூர், கோவை, முசிறி, காரைக்குடி, திருச்சி உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.நீதிபதி வி.சிவஞானம் 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வாகி மயிலாடுதுறை, கும்பகோணம், ஈரோடு, நாமக்கல், பவானி உள்ளிட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.நீதிபதி ஜி.இளங்கோவன் 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வாகி கோவை, தூத்துக்குடி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்ட நீதிமன்றங்களில்  நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.நீதிபதி எஸ்.ஆனந்தி 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வானவர். செங்கல்பட்டு, மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி உள்ளிட்ட மாவட்ட நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.எஸ்.கண்ணம்மாள் 1991 ஜூலையில் நீதித்துறைக்கு தேர்வாகி கிருஷ்ணகிரி, உடுமலைப்பேட்டை, சங்ககிரி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றியுள்ளார்.நீதிபதி எஸ்.சத்திகுமார் 1994 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வாகி சிவகங்கை, திருவொற்றியூர், சேலம், கள்ளக்குறிச்சி, பொன்னேரி, செஞ்சி உள்ளிட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றியுள்ளார்நீதிபதி கே.முரளிசங்கர் 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வாகி கும்பகோணம், கோவை, சேலம், சங்ககிரி, பாபநாசம் உள்ளிட்ட மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதியாக   பணியாற்றியுள்ளார்நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வாகி திருச்சி, திண்டுக்கல், மதுரை, நாங்குனேரி உள்ளிட்ட மாவட்டங்களில்  நீதிபதியாக பணியாற்றியுள்ளார்நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வி 1995 நவம்பரில் நீதித்துறைக்கு தேர்வாகி ஈரோடு, கோவை, தஞ்சாவூர், கரூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் நீதிபதியாக  பணியாற்றியுள்ளார்.நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்ற இவர்கள் மாவட்ட நீதிபதியாக இருந்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்கள். நேற்று பதவியேற்ற நீதிபதிகள் எஸ்.ஆனந்தி மற்றும் எஸ்.கண்ணம்மாள் ஆகியோர் அடுத்த மாதம் பணி ஓய்வு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது….

The post சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகள் 8 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Chennai High Court ,Chennai ,Chief Justice ,Muniswar ,High Court of Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் பெண்களின்...