×

கைதியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் : 2 போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்

சென்னை: புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஒருவரை வேறு சிறைக்கு மாற்றப்போவதாக மிரட்டி ₹10 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக எழுந்த புகாரில் 2 போலீஸ் ஏட்டுக்களை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புழல் மத்திய சிறையில் (விசாரணை) சுமார் 1500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த கைதிகளை பார்க்க, அவர்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் பார்வையாளர் நேரத்தின்போது வந்து செல்வது வழக்கம்.

இதுபோன்ற சமயத்தில், சிறைக் கைதிகளுக்கு பல்வேறு சலுகைகளை செய்து தருவதாக அவர்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் சிறை காவலர்கள் பணம் வசூலிப்பதாக, சிறைத்துறை உயர் அதிகாரிகளுக்கு கடந்த மார்ச் மாதத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில், 50 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக சிறைக்காவலர் பிச்சையா பிடிபட்டார்.   விசாரணையில், ஜெயிலர் ஜெயராமன் தூண்டுதலால் லஞ்சம் வாங்கியது தெரிந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். ஜெயிலர் ஜெயராமனை மதுரை சிறைக்கு உடனடியாக இடமாற்றம் செய்து சிறைத்துறை அதிரடியாக உத்தரவிட்டது. இந்த விவகாரத்தில் மேலும் 2 சிறை காவலர்களுக்கு தொடர்பு இருப்பது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதாவது, கைதி ஒருவரை பூந்தமல்லி சிறைக்கு இடமாற்றம் செய்யப்போவதாக மிரட்டி அவரது உறவினர்களிடம் தலைமை காவலர்கள் சேகர், வேலுச்சாமி இருவரும் தலா 10 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றுள்ளனர்.  இதுதொடர்பான வீடியோவை குறிப்பிட்ட கைதியின் உறவினர்கள் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசில் கொடுத்ததாக கூறப்படுகிறது. எனவே, வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தலைமை காவலர்கள் சேகர் மற்றும் வேலுச்சாமி இருவரும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இருவரையும் கைது செய்ய, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதால், இருவரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Tags :
× RELATED பெண்ணிடம் ₹2.50 லட்சம் மோசடி விவகாரம்...