×

சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் செல்ல முடிவு; தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக கட்சியினரை வரவழைக்க ஓபிஎஸ் திட்டம்: போலீஸ் அனுமதி மறுப்பு

சென்னை: அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு எடப்பாடியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் செல்ல திட்டமிட்டுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், நீதிமன்ற அனுமதி வாங்கி வந்தால்தான் பாதுகாப்பு தர முடியும் என்று அவருக்கு போலீசார் பதில் அளித்துள்ளனர். கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக சிறப்பு பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றம் சென்றார். நீதிமன்றமும், எடப்பாடி தலைமையில் நடந்த பொதுக்குழு செல்லும் என்று அறிவித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.இந்த நிலையில், சுமார் இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்து இடைக்கால பொதுச்செயலாளரக பதவியேற்றுக் கொண்டார். எடப்பாடி கட்சி அலுவலகம் வருகையையொட்டி வழிநெடுக அவருக்கு ஆட்டம், பாட்டம், மேளதாளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்த எடப்பாடி, ‘‘ஓபிஎஸ் பச்சோந்தியை விட மோசமானவர். நேரத்துக்கு நேரம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார். அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டாலும் அதிமுக கட்சியில் அவரை சேர்க்க மாட்டோம்” என்று அதிரடியாக கூறினார்.இந்த பரபரப்பான சூழ்நிலையில், அதிமுக வழிகாட்டு குழு உறுப்பினரும், ஓபிஎஸ் தீவிர ஆதரவாளருமான ஜெ.சி.டி.பிரபாகர் நேற்று சென்னை, ராயப்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு மனு அளித்தார். அதில், “கட்சி தொடர்பான பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் தொடரும் சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சி தலைமை அலுவலகம் சென்று, கட்சி பணிகளை ஆற்றிட எந்தவித சட்ட தடையும் இல்லை. எனவே எதிர்வரும் நாட்களில் ஓ.பன்னீர்செல்வம் கட்சி அலுவலகம் செல்லும்போது அவரை வரவேற்க அதிகப்படியான தொண்டர்கள் கூடும் சூழ்நிலை உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் கலவரம் செய்ய திட்டம் தீட்டி உள்ளனர். எனவே கட்சியின் ஒருங்கிணைப்பாளர் (ஓபிஎஸ்), மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிமுக தொண்டர்கள் வந்து செல்ல எந்தவித இடையூறும் இல்லாத வகையில் கட்சி தலைமை அலுவலகம் அமைந்துள்ள எம்ஜிஆர் மாளிகைக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று அதில் கூறி இருந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமியை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வமும் இன்னும் ஒன்று, இரண்டு நாட்களில் சென்னையில் உள்ள அதிமுக கட்சி அலுவலகம் சென்று தனது பலத்தை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக தொண்டர்களை சென்னை வர அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்கு ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரணம், ‘ஓ.பன்னீர்செல்வத்துக்கு தொண்டர்கள் ஆதரவு உள்ளது, எடப்பாடி பழனிசாமிக்கு நிர்வாகிகள் ஆதரவு உள்ளது’ என்ற கருத்து அதிமுக கட்சியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதனால் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் புடைசூழ கட்சி தலைமை அலுவலகம் செல்ல ஓபிஎஸ் திட்டமிட்டு இருந்தார். இதற்காகத்தான், போலீஸ் பாதுகாப்பு கேட்டு ராயப்பேட்டை காவல் நிலையில் ஜெ.சி.டி.பிரபாகர் மூலம் மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஓபிஎஸ்சின் இந்த கோரிக்கையை சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. காரணம், கடந்த ஜூலை மாதம் 11ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சி அலுவலகம் சென்று கதவை உடைத்து பொருட்களை திருடி சென்று விட்டதாக எடப்பாடி அணியினர் போலீசில் புகார் கூறி உள்ளனர். இது தொடர்பாக 4 வழக்குகளை போலீசார் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு மீது தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் ஓபிஎஸ் கட்சி அலுவலகம் செல்ல போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு அளித்துள்ளார். இந்த மனுவை பரிசீலனை செய்த காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் அளித்த மனுவில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக நான் (ஓபிஎஸ்) தற்போது தொடர்கிறேன். இதனால் கட்சி பணியாற்ற அதிமுக தலைமை அலுவலகம் செல்ல உள்ளேன். ஏற்கனவே நான் கடந்த ஜூலை 11ம் தேதி கட்சி அலுவலகம் சென்றபோது, சமூகவிரோதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டதுபோல, தற்போதும் சமூகவிரோதிகளால் அச்சுறுத்தல் ஏற்படும் ஆபத்து உள்ளதாக கூறி உள்ளார். அதிமுக அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டபோது, இபிஎஸ், ஓபிஎஸ் என இரண்டு தரப்பினரும் சீலை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, அதிமுக கட்சி அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் வழங்க வேண்டும் என்று கூறியது. இதுபோன்ற ஒரு சூழ்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை அலுவலகம் சென்றால் மீண்டும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால், ஓபிஎஸ் தரப்பினர் இதுகுறித்து நீதிமன்றம் சென்று, கட்சி அலுவலகம் செல்ல அனுமதி வாங்கி வந்தால் போலீஸ் முழு பாதுகாப்பு அளிக்க தயாராக இருக்கிறது என்ற கருத்தை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். போலீசாரின் இந்த திடீர் அறிவிப்பால், ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை அலுவலகம் செல்வதற்க திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவே கூறப்படுகிறது….

The post சென்னையில் உள்ள கட்சி தலைமை அலுவலகம் செல்ல முடிவு; தமிழகம் முழுவதும் இருந்து அதிமுக கட்சியினரை வரவழைக்க ஓபிஎஸ் திட்டம்: போலீஸ் அனுமதி மறுப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,OPS ,AIADMK ,Tamil Nadu ,O. Panneerselvam ,Edappadi ,Dinakaran ,
× RELATED பிரிந்துக் கிடக்கும் தொண்டர்களை...