×

சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்திற்கு 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு: அதிகாரிகள் தகவல்

 

சென்னை, ஜூன் 19: சென்னைக்கான புதிய ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் தொடர்பாக, வீடு வீடாக சென்று, 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் பரப்பளவு 5,904 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 5,904 சதுர கிலோ மீட்டர் பரப்பளவுக்கு புதிய போக்குவரத்து திட்டம் தயார் செய்ய சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் முடிவு செய்துள்ளது.

ஒன்றிய நகர்ப்புற விவகாரங்கள் துறையின் தேசிய நகர்ப்புற போக்குவரத்துக் கொள்கையின் அடிப்படையில் அடுத்த 30 ஆண்டுகளுக்கு திட்டமிடும் வகையில் இந்தப் போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது. குறிப்பாக, இந்த போக்குவரத்து திட்டம் குறைந்த கார்பனை வெளியிடும் வகையிலும், குறைந்த அளவு காற்று மாசு மற்றும் ஒலி மாசுவை உண்டாக்கும் வகையில் வடிவமைக்கப்படும். மேலும் மழை, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்கள், கொரோனா போன்ற பெருந்தொற்று ஆகிய காலங்களில் எந்த தடையும் இன்றி செயல்படும் வகையிலான மீள் திறனுடன் வகையில் இருக்கும்.

இதைத் தவிர்த்து அனைவரும் எளிதில் அணுகும் வகையிலும், நடந்து செல்பவர்கள், சைக்கிளில் செல்பவர்கள் என்று அனைவருக்கும் ஏற்ற வகையிலும், சாலை விபத்துகள் இல்லாத பாதுகாப்பான, சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான போக்குவரத்து திட்டமாக இது இருக்கும். இந்தத் திட்டத்தை தயார் செய்யும் பணிக்கான ஒப்பந்தம் தனியார் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்துத் திட்டம் தொடர்பாக 50 ஆயிரம் பேரிடம் வீடு வீடாக ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், ‘‘சென்னை மாநகருக்கு புதிய போக்குவரத்து திட்டம் தயார் செய்யப்படவுள்ளது.

இதில் இயந்திர வாகனம் இல்லாத போக்குவரத்து, பொது போக்குவரத்தை மேம்படுத்துதல், சாலை விபத்துகளை குறைத்தல் உள்ளிட்டவை தொடர்பான விரிவான திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.இதற்கான முதல்கட்ட கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இதில் சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்துக் குழுமம், டெல்லியில் உள்ள ஸ்கூல் ஆப் பிளானிங் மற்றும் ஆர்க்கிடெக்சர் நிறுவனத்தின் முதல்வர், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர், சிஎம்டிஏ, சென்னை மெட்ரோ ரயில், எம்டிசி உள்ளிட்ட துறைகளில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் பல்வேறு கருத்துகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. விரைவில், சென்னையில் 50 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பழைய சென்னையில் 30 ஆயிரம் பேரிடமும், தற்போது புதிதாக விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னையில் 20 ஆயிரம் பேரிடமும் ஆய்வு நடத்தப்படவுள்ளது. இதனைத் தொடர்ந்து வரைவு அறிக்கை தயார் செய்யப்படும். அதன் அடிப்படையில் இறுதி அறிக்கை தயார் செய்யப்படும்,’’ என்றார்.

* கட்டுப்பாட்டு அறை
சென்னையில் உள்ள 50 சந்திப்புகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப கேமராக்கள், சென்சார்கள் பொருத்தப்பட உள்ளன. 10 இடங்களில் வாகன வேகத்தை பதிவு செய்யும் கருவியும் பொருத்தப்பட உள்ளது. இதன் வாயிலாக, சாலை விதிகளை மீறுவோரும், புதிய தொழில்நுட்பம் வாயிலாக கண்காணித்து, இணையவழியில் உடனுக்குடன் அபராதம் விதிக்கப்படும். இவற்றை ஒரே இடத்தில் இருந்தபடி கண்காணிக்கும் வகையில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட உள்ளது.

விபத்து, வாகன நெரிசல் அதிகமானால் அது குறித்த தகவல் கட்டுப்பட்டு அறைக்கு தெரியவரும். அதற்கேற்ப, போக்குவரத்து மாற்றி விடப்படும். மேலும், 17 இடங்களில் பெரிய அளவிலான ‘டிஜிட்டல் போர்டு’கள் அமைக்கப்பட உள்ளன. இதில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள சாலைகள், நெரிசல் குறைவாக உள்ள மாற்று பாதை, எந்த இடத்திற்கு எவ்வளவு நேரத்தில் செல்லமுடியும் உள்ளிட்ட தகவலை வாகன ஒட்டிகள் தெரிந்து கொள்ள முடியும்.

* சாலை கட்டமைப்பு மாற்றம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் அதிக வாகன நெரிசல், குறைவான வாகன நெரிசலை அடையாளம் கண்டு, அதற்கேற்ப வழிவிடும் வகையில் இந்த சிக்னல்கள் இயங்கும். ஆம்புலன்ஸ், வி.ஐ.பி., வாகனங்கள் வரும்போது, சிக்னல்கள் தானாகவே வழிவிடும் வகையில் பச்சை நிறத்தில் மாறும். இதனால், ஒவ்வொரு சிக்னலிலும், நீண்ட நேரம் வாகன ஓட்டிகள் காத்திருக்கும் நிலை தவிர்க்கப்படும். இதற்காக, 165 போக்குவரத்து சந்திப்புகளில், சாலை கட்டமைப்புகளும் மாற்றியமைக்கபட உள்ளது.

The post சென்னைக்கான ஒருங்கிணைந்த போக்குவரத்து திட்டத்திற்கு 50,000 பேரிடம் கருத்து கேட்க முடிவு: அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்ட...