×

பிஏபி தொகுப்பு அணைகள் நிரம்பின : விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை:  கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு பிஏபி தொகுப்பு அணைகள் அனைத்தும்  நிரம்பியுள்ளன. திருமூர்த்தி அணை மட்டும் ஓரிரு நாளில் நிரம்பும்  நிலையில் உள்ளது. பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் மூலம்  கோவை,  திருப்பூர் மாவட்டங்களில் 4 லட்சத்துக்கும் அதிகமான ஏக்கர் நிலம் பாசன  வசதி பெறுகிறது. இந்த திட்டத்தின் தாய் அணையாக வால்பாறையில் உள்ள சோலையார் அணை உள்ளது. இந்த அணையில், இருந்து பரம்பிக்குளம் அணைக்கும்,  அங்கிருந்து ஆழியார் அணைக்கும், சர்க்கார்பதி பவர் ஹவுஸ் வழியாக கான்டூர்  கால்வாய் மூலம் உடுமலை அருகே திருமூர்த்தி அணைக்கும் தண்ணீர் கொண்டு  செல்லப்படுகிறது.

160 அடி உயரம் கொண்ட சோலையார் அணை கடந்த 4 ஆண்டுகளாக  நிரம்பவில்லை. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பெய்த தென்மேற்கு பருவமழை  காரணமாக நீர்வரத்து அதிகரித்து அணை வேகமாக நிரம்பியது. கடந்த 2 வாரங்களுக்கு முன் அணை முழு கொள்ளளவை எட்டியதால் பரம்பிக்குளம் அணைக்கும், உபரிநீர் கேரளாவுக்கும் திறந்து விடப்பட்டது. சோலையார் நீர்மட்டம் நேற்று  ஷட்டருக்கு மேற்பகுதியையும் தாண்டி 162.87 அடியாக இருந்தது. 3600 கனஅடி  நீர் வந்து கொண்டிருந்தது. அந்த நீர் அப்படியே பரம்பிக்குளம் அணைக்கு  சென்றது. 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையும் கடந்த 4 ஆண்டுகளாக  நிரம்பாமல் இருந்தது. நேற்று காலை அணை நிரம்பியது. நீர்மட்டம் 71.25 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி மதகுகள் வழியே தண்ணீர் வெளியேற்றப்பட்டது.  நீர்வரத்து 4487 கனஅடியாக இருந்தது. 1181 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

அடுத்து  120 அடி உயரம் கொண்ட ஆழியார் அணையும் மூன்று ஆண்டுக்குப்பிறகு நேற்று  முன்தினம் நிரம்பியது. நீர்மட்டம் 117 அடியை எட்டியதால் உபரிநீர் திறந்து  விடப்பட்டது. நேற்று நீர்வரத்து 1669 கனஅடியாக இருந்தது. 1588 கனஅடி நீர்  வெளியேற்றப்படுகிறது. பிஏபி தொகுப்பு அணைகளில் இந்த மூன்று அணைகளும்  நிரம்பி வழியும் நிலையில், கடைசி அணையான திருமூர்த்தி அணை இன்னும்  நிரம்பாவிட்டாலும், தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் ஓரிரு தினங்களில்  நிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

60 அடி உயரம் கொண்ட திருமூர்த்தி அணையில், நேற்று நீர்மட்டம் 53.08 அடியாக இருந்தது. அணை நிரம்ப இன்னும் 7 அடி மட்டுமே தேவை. கான்டூர்  கால்வாய் மூலம் 961 கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. குடிநீருக்காக 30  கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த பல ஆண்டுகளுக்குப்பிறகு பிஏபி  தொகுப்பு அணைகள் அனைத்தும் ஒரே நேரத்தில் நிரம்பி உள்ளதால் பிஏபி பாசன  விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாய பணிகளில் ஆர்வமுடன்  ஈடுபட்டு வருகின்றனர். திருமூர்த்தி அணையில இருந்து பிஏபி கால்வாயில் வரும்  27ம் தேதி முதலாம் மண்டல பாசனத்தின் இறுதிச்சுற்று தண்ணீர் திறக்கப்பட  உள்ளது. இதற்காக ஷட்டர் பராமரிப்பு பணி நடந்து வருகிறது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : Dams, farmers, happiness
× RELATED மதுராந்தகம் அருகே வெள்ளப்புத்தூர்...