×

சைதை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வெற்றி செல்லும் : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை: சைதாப்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.  தமிழக சட்டப்பேரவைக்கு கடந்த 2016ல் நடந்த தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில்  திமுக சார்பில் மா.சுப்பிரமணியன் உள்ளிட்ட 21 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் வெற்றி பெற்றார். இந்நிலையில், மா.சுப்ரமணியன் வெற்றி பெற்றாதை எதிர்த்து அந்த தொகுதியில் போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் எஸ்.பார்த்திபன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து கணக்குகளை முறையாக தாக்கல் செய்யவில்லை என்றும், எனவே அவர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி மா.சுப்ரமணியன் பதில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில்‘‘ எனக்கு எதிராக சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட பார்த்திபன் தெரிவித்த குற்றச்சாட்டுகள் தவறானவை. அடிப்படை ஆதாரமற்றவை. உரிய ஆவணங்கள் இல்லாமல் வழக்கு தொடர்நதுள்ளார். வேட்புமனுவில் அனைத்து விபரங்களும் உரிய ஆவணங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பொன்.கலையரசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மா.சுப்பிரமணியன் சார்பில் மூத்த வக்கீல் பி.வில்சன் ஆஜராகி, ‘‘மனுதாரரின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது. உரிய நடைமுறைகளைப் பின்பற்றித்தான் மா.சுப்பிரமணியன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இதை தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொண்டுள்ளார். வழக்கு தொடர்ந்தவர் தேர்தலில் வெறும் 89 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். எனவே, இந்த வழக்கை தொடர்ந்ததில் உள்நோக்கம் உள்ளது. எனவே, வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சைதாப்பேட்டை தொகுதியில் திமுக எம்எல்ஏ-வாக மா.சுப்பிரமணியன் வெற்றி பெற்றது செல்லும் என அறிவித்து, பார்த்திபன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.

Tags :
× RELATED தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற...