×

சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் : எம்.எல். ஏ. தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்!!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்காததால் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதிமுக கூட்டணியில் சீட் கிடைக்காத அதிருப்தியில் பல தலைவர்கள் போட்டி வேட்பாளர்களாக களத்தில் குதித்து வருகின்றனர். அந்த வரிசையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை எதிர்த்து, அதே கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தற்போதைய எம்எல்ஏவுமான தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவ்வாறு தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக அக்கூட்டணி கட்சியினரே களத்தில் குதித்துள்ளது தமிழக அரசியல் களத்தை பரபரப்பாக்கியுள்ளது. இதனால், கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.இந்த நிலையில், அதிமுக வேட்பாளருக்கு எதிராக சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்த எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” கழகத்தின் கொள்கை குறிக்கோள் களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள காரணத்தினால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த தோப்பு வெங்கடாச்சலம் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது எனக் கேட்டுக் கொள்கிறோம்,’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  …

The post சீட் கிடைக்காத அதிருப்தியில் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் : எம்.எல். ஏ. தோப்பு வெங்கடாச்சலம் அதிமுகவில் இருந்து அதிரடி நீக்கம்!! appeared first on Dinakaran.

Tags : SEAT ,Chennai ,MLA ,Thopa Venkatachalam ,Tamil Nadu Assembly ,
× RELATED இந்தியாவில் பாஜ கூட்டணி 21 இடத்தில்...