×

சாராய வழக்கில் கைதான கணவரை மீட்டு தரக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

* மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பரபரப்பு* போலீசார் சோதனை செய்யாததால் தொடரும் விபரீதம்திருப்பத்தூர் : சாராய வழக்கில் கைதான கணவரை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி அளித்தனர். நேற்று மட்டும் 383 மனுக்கள் பெறப்பட்டது. கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டதால் கடந்த வாரம் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலெக்டர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், மாதனூர், ஆலங்காயம் உள்ளிட்ட  சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.அப்போது ஒரு பெண் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார். உடனே தான் அழைத்து வந்த 3 குழந்தைகளுடன் திடீரென பையில் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தபெண்ணின் பெயர் மணிமேகலை (30) என்பதும் அவரது குழந்தைகள் பூஜா (8), கிஷோர் (7) திலீபன் (5) என்பதும் தெரியவந்தது. இவரது கணவர் முருகன். பின்னர் வாணியம்பாடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் பாண்டியன் மணிமேகலை கையில் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்து வெளியே கொண்டு வந்தார். மேலும் விசாரணை நடத்தினர். அப்போது மணிமேகலை கூறியதாவது: வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர் பகுதியில் தொடர்ந்து கள்ளச்சாராயம் விற்று வந்தவர் பிரபல சாராய வியாபாரி மகேஸ்வரி. இவர் 12 முறை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் அப்பகுதியில் உள்ள கோயில் திருவிழாவின்போது சாராய கும்பல் மற்றும் இளைஞர்கள் இடையே மோதல் நடந்தது. மோதல் காரணமாக அப்பகுதி இளைஞர்கள் தாலுகா காவல் நிலையத்தில் சாராய விற்பனை குறித்து புகார் கொடுத்தனர். அன்று மாலை சாராய வியாபாரியின் அடியாட்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து அப்பகுதி இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.அதன் காரணமாக வாணியம்பாடி தாலுகா காவல் நிலைய போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். நேதாஜி நகர் பகுதியைச் சேர்ந்த முருகன் (35) என்பவரை கைதுசெய்தனர். தற்போது அவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே இதில் கைது செய்யப்பட்டுள்ள எனது கணவர் முருகனை மீட்டு தாருங்கள் என மணிமேகலை தெரிவித்தார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அந்தப்பெண்ணை திருப்பத்தூர் நகர காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர்களை எச்சரித்து அனுப்பினர். திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இதுவரை 5க்கும் மேற்பட்டோர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தடுக்க வேண்டிய காவல்துறையினர் அங்கு மனுக்கள் கொண்டு வருபவர்களிடம் உரிய சோதனை செய்த பிறகு அனுமதிக்காததால் இதுபோன்ற விபரீத செயல்கள் அடிக்கடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்து வருகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்….

The post சாராய வழக்கில் கைதான கணவரை மீட்டு தரக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி appeared first on Dinakaran.

Tags : People's Grievance Redressal Day ,
× RELATED குறைதீர் நாள் கூட்டத்தில் 289 மனுக்கள் குவிந்தன