×

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பட்டியலும் வெளியாகிறது

சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியலை மு.க.ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார். அதேநேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இன்று அந்த பட்டியலும் வெளியிடப்படுகிறது. தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. வருகிற 12ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளது. தேர்தலுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு 25 தொகுதிகள், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகளுக்கு தலா 6 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 3, மமக 2, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் நேற்று கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. திமுக நேற்று வரை கூட்டணி கட்சிகளுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. இவர்களுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையிலான திமுக குழுவினர் நேற்று காலை முதல் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கூட்டணி கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் அளித்த பேட்டி: திமுக தலைமையிலான கூட்டணியில் எங்களுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 3 தொகுதிகள் எது என்று கேட்டார்கள். முதல் தொகுதியாக கடையநல்லூர் சிட்டிங் தொகுதி என்பதால் அதை கேட்டோம். அதை ஓகே சொல்லியிருக்கிறார்கள். இரண்டாவதாக ஆம்பூர், வாணியம்பாடி தொகுதியில் ஏதாவது ஒரு தொகுதியை வழங்க வேண்டும் என்று கேட்டோம். ஆம்பூரா, வாணியம்பாடியா என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். அடுத்த ஒரு தொகுதியாக திருவாடனை, பாபநாசம், திருச்சி கிழக்கு, சிதம்பரம், சென்னை மாவட்டத்தில் ஒரு தொகுதியை கொடுத்தோம். அதில் சிதம்பரம், பாபநாசத்தில் ஒரு தொகுதியை எடுத்து கொள்ளுங்கள் என்று கூறியுள்ளனர். இதனை தலைவரிடம் கேட்டு மாலை முடிவு செய்வோம் என்று கூறியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். கூட்டணி கட்சிகளுக்கு என்னென்ன தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பாக இன்று காலை அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து மாலையில் திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மு.க.ஸ்டாலின் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிடுகிறார். தொடர்ந்து நாளை திமுக தேர்தல் அறிக்கை வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் கதாநாயகனாக திமுகவின் தேர்தல் அறிக்கை விளங்கும். அதன்படி இந்த தேர்தலிலும் தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் மக்களை கவரும் வகையில் முக்கிய அறிவிப்புகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக விவசாயிகள், மாணவர்களுக்காக, பெண்களுக்காக பிரத்யேக அறிவிப்புகள் இடம் பெறும் என்று கூறப்படுகிறது. இதனால், திமுகவின் தேர்தல் அறிக்கை மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து மு.க.ஸ்டாலின் வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளார். அதே போல கூட்டணி கட்சி தலைவர்களும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்….

The post சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு: கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பட்டியலும் வெளியாகிறது appeared first on Dinakaran.

Tags : Kazhagam ,Chennai ,Djagagam ,G.K. Stalin ,
× RELATED நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தந்தை பெரியார் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம்