×

கோவை மாவட்டத்தில் 10ம் வகுப்பு மொழிப்பாடத்தேர்வை 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர்

கோவை, ஏப். 7: கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 40 ஆயிரத்து 603 பேர் எழுதினர். 1290 பேர் எழுதவில்லை. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. வரும் 20ம் தேதி வரை நடக்கிறது. இதில், மொழிப்பாடத்திற்கான தேர்வு ேநற்று நடந்தது. இந்த தேர்வினை அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என கோவையை சேர்ந்த 388 பள்ளிகள் மற்றும் பொள்ளாச்சியை சேர்ந்த 138 பள்ளிகள் என மொத்தம் 526 பள்ளிகளை சேர்ந்த 41,530 மாணவ, மாணவிகள் எழுத இருந்தனர். மொத்தம் 157 தேர்வு மையங்களில் தேர்வு நடந்தது.

இந்த தேர்வினை பொள்ளாச்சியை சேர்ந்த 8,922 பேர் மற்றும் கோவையை சேர்ந்த 31,318 பேர் என மொத்தம் 40,240 பேர் எழுதினர். 1290 பேர் எழுதவில்லை. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கான தேர்வில் முறைகேடுகள், தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு பணிக்காக 180 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு இருந்தன.
தமிழ் பாடத்திற்கான தேர்வு மிகவும் எளிதாக இருந்ததாக மாணவிகள் கருத்து தெரிவித்துள்ளனர். கோவை புனித காணிக்கை பள்ளி மாணவி ரிப்கா கூறுகையில்,“தேர்வு மிகவும் எளிதாக இருந்தது. எதிர்பார்த்த கேள்விகள் அனைத்தும் வந்திருந்தது.

இதனால், 80 மதிப்பெண்களுக்கு மேல் எளிதாக எடுக்க முடியும். கடந்த ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளும், ஏற்கனவே நடந்த தேர்வுகளில் நடந்த கேள்விகளும் இடம்பெற்றிருந்தன’’ என்றார். மாணவி மரியம் ஆசிபா கூறுகையில்,“பொதுத்தேர்வு என்பதால் சிறிய அளவு பதற்றம் இருந்தது. ஆனால், தமிழ் தேர்வு வினாத்தாள் பார்த்தவுடன் பதற்றம் நீங்கியது. அந்த அளவிற்கு வினாக்கள் எளிதாக இருந்தது. பெரும்பாலான கேள்விகள் புத்தகத்தின் பின் பகுதியில் இருந்தே கேட்கப்பட்டிருந்தன. ஒரு மதிப்பெண் வினாக்கள் உள்ளிட்டவை எளிதாக இருந்தது. இலக்கணப்பகுதி மட்டும் சற்று கடினமாக இருந்தது. 80 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க முடியும்’’ என்றார்.

The post கோவை மாவட்டத்தில் 10ம் வகுப்பு மொழிப்பாடத்தேர்வை 40 ஆயிரம் மாணவர்கள் எழுதினர் appeared first on Dinakaran.

Tags : Coimbatore district ,Coimbatore ,Dinakaran ,
× RELATED வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு...