×

கோவாவில் இறந்தவரின் பெயரில் உரிமம் பெற்று சட்ட விரோத மது பார் நடத்தும் ஸ்மிருதி மகள்: அமைச்சர் பதவியை பறிக்க காங். வலியுறுத்தல்

பனாஜி: இறந்தவரின் பெயரில் உரிமம் பெற்று, கோவாவில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் சட்ட விரோதமாக மது பார் நடத்தி வருவதால், ஸ்மிருதி இரானியை அமைச்சர் பதவியில் இருந்து பிரதமர் நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. ஒன்றிய ஜவுளித்துறை மற்றும் சிறுபான்மை விவகாரங்கள் அமைச்சராக இருப்பவர்  ஸ்மிருதி இரானி. இவருடைய மகள் ஜோயிஷ் இரானி, கோவாவில் உள்ள அசாகோவில் ‘சில்லி சோல்ஸ் கோவா’ என்ற பெயரில் உணவகத்துடன் கூடிய மது பாரை நடத்தி வருகிறார். இந்த உணவகத்துக்கான மதுபான பார் உரிமத்தை கடந்த மாதம் ஜோயிஷ் இரானி பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்தாண்டு மே மாதமே இறந்து விட்ட ஒருவரின் பெயரில் ஆவணங்களை சமர்பித்து இந்த மதுபான உரிமத்தை அவர் பெற்றிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதையடுத்து, கோவாவின் கலால் கமிஷனர் நாராயண் எம் காட், நேற்று முன்தினம் இந்த மதுபான உணவகத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஜூலை 29ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கவில்லை என ஜோயிஷ் இரானி வழக்கறிஞர் மறுத்துவரும் நிலையில், அதிகாரிகள் வழங்கிய நோட்டீசின் நகலை காங்கிரஸ் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது.  இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில், ‘நோட்டீஸ் கொடுத்த கலால் அதிகாரி, மேல் அதிகாரிகளின் அழுத்தத்திற்குப் பிறகு மாற்றப்பட்டுள்ளார். இரானியின் குடும்பத்தினர் மீது கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளது. ஸ்மிருதி இரானியின் மகள் பெற்றுள்ள உரிமம் மே 2021ல் இறந்த நபரின் பெயரில் உள்ளது. இந்த பார் உரிமம் கடந்த மாதம் எடுக்கப்பட்டுள்ளது. இது சட்ட விரோதமானது. கோவா விதிகளின்படி, ஒரு உணவகம் ஒரு பார் உரிமத்தை மட்டுமே பெற முடியும், ஆனால், இந்த உணவகத்திற்கு 2 பார் உரிமங்கள் உள்ளன. எனவே, ஒன்றிய அமைச்சரவையில் இருந்து ஸ்மிருதி இரானியை உடனடியாக நீக்க வேண்டும் என்று நாங்கள் பிரதமரிடம் கோருகிறோம்,’ என்று தெரிவித்தார். …

The post கோவாவில் இறந்தவரின் பெயரில் உரிமம் பெற்று சட்ட விரோத மது பார் நடத்தும் ஸ்மிருதி மகள்: அமைச்சர் பதவியை பறிக்க காங். வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Smriti ,Goa ,Congress ,Panaji ,Union Minister ,Smriti Irani ,Dinakaran ,
× RELATED மதுரை, கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்...