×

கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அவதி

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட் செல்லும் பிரதான சாலையில், தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு  செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் செல்லும். எனவே, இந்த சாலை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இந்த நிலையில், கோயம்பேடு மார்க்கெட் செல்லும் பிரதான சாலையை ஆக்கிரமித்து,  சுமார் 300க்கும் மேற்பட்ட கடைகள் பல வருடகாலமாக போடப்பட்டுள்ளன. இதன்காரணமாக, அந்த சாலையில் காலை மற்றும் இரவு நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும்,  இந்த பகுதியில்  அடிக்கடி விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. இதனால், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றக்கோரி கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தியிடம் வாகன ஒட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை முற்றிலும் அகற்றவதற்காக ஏற்பாடுகளை செய்வதற்கு அங்காடி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில்  கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி அன்று அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர், போக்குவரத்து போலீசார் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்போது, கடைகளை அகற்றுவதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனை அடுத்து அங்கு கோயம்பேடு போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றினர். அப்போது ஆத்திரமடைந்த  பெண் வியாபாரி ஒருவர் மார்க்கெட் காவலாளியை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதியது.இதனைத் தொடர்ந்து எதிர்ப்புகளை மீறி சுமார் 200க்கும் மேற்பட்ட கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து மீண்டும் சுமார் 300க்கும் மேற்பட்ட  ஆக்கிரமிப்பு கடைகள் போடப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு மீண்டும் ஏற்பட்டுள்ளது.இதனால் காலை மற்றும் இரவு நேரங்களில் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அங்கு செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் தவித்து வருவதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து,  சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘சென்னையில் ஆக்கிரமிப்பு கடைகளை கண்டறிந்து மாநகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில் கோயம்பேடு மார்க்கெட் பிரதான சாலையில் போடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அங்காடி நிர்வாக அதிகாரிகள் தினமும்  அப்புறப்படுத்தி வந்தாலும், மீண்டும்மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள்  அதிகமாக முளைத்துக் கொண்டு வருகிறது. இந்த ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, விபத்து ஏற்படும் முன்பே   இந்த  கடைகளை அகற்ற வேண்டும்.’’  என கோருவதாக அவர்கள் கூறினர். …

The post கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து: வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Coimbed Market ,Annagar ,Chennai Coimbed Market ,Coimbadu Bus Station ,
× RELATED கோயம்பேடு சந்தையில் நிறுத்தி...