×

கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு சீல்: அங்காடி நிர்வாகம் எச்சரிக்கை, கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்

 

அண்ணாநகர், மார்ச் 11: கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு 2021 முதல் 2024ம் ஆண்டுக்கான உரிமம் 30ம் தேதிக்குள் முடிவடைவதால், வியாபாரிகள் அடுத்த 3 ஆண்டுக்கான தங்கள் கடைகளின் உரிமத்தை விரைந்து புதுப்பிக்க வேண்டும், என அங்காடி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், உரிமத்தை புதுப்பிக்க தவறும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும், எனவும் எச்சரித்துள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய காய்கறி சந்தையாக கோயம்பேடு காய்கறி மார்க்கெட் திகழ்கிறது.

85 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மார்க்கெட்டில் காய்கறி, பழம் மற்றும் பூ கடைகளுக்கு தனித்தனி பிரிவுகள் உள்ளன. இங்கு 1000 மொத்த விற்பனை கடைகள், 2000 சில்லரை விற்பனை கடைகள் உள்ளிட்ட 3100க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. கோயம்பேடு மார்க்கெட்டில் கடையின் உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும். ஆனால், இங்குள்ள கடைகளின் உரிமையாளர்கள் பலர், கடை உரிமத்தை முறையாக புதுப்பிக்காமல் இருந்து வருகின்றனர்.

இதுதொடர்பாக எழுந்த புகாரின் பேரில், கோயம்பேடு அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி தலைமையிலான அதிகாரிகள் கோயம்பேடு மார்க்கெட்டில் ஆய்வு செய்தனர். அப்போது உரிமம் புதுப்பிக்காமல் ஏராளமான கடைகள் செயல்பட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அங்காடி நிர்வாகம் சார்பில், சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கி, கடை உரிமத்தை உடனடியாக புதுப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

ஆனாலும், வியாபாரிகள் இதை கண்டுகொள்ளாமல் உரிமத்தை புதுப்பிக்காமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த டிசம்பர், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் உரிமம் புதுப்பிக்காத சுமார் 50 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். உரிமம் புதுப்பிக்க தவறிய கடைகளுக்கு அங்காடி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து உரிமம் புதுப்பிக்க தவறிய வியாபாரிகள் சிலர், அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு வந்து தங்களது கடை உரிமத்தை புதுப்பித்தனர்.

இந்நிலையில், கடந்த 2021 முதல் 2024ம் ஆண்டுக்கான உரிமம் 30-3-2024 அன்றுடன் முடிவடைகிறது. எனவே, கடை உரிமம் காலாவதியாவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பாக உரிமம் புதுப்பிக்க வேண்டும் என்று அங்காடி நிர்வாகம் சார்பில் அறிவித்தப்பட்டுள்ளது. இதையடுத்து வியாபாரிகள் 2024ம் ஆண்டு முதல் 2027ம் ஆண்டுக்கான உரிமத்தை புதுப்பித்துக்கொள்ள அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு வந்து விண்ணப்பம் பெற்று புதுப்பித்து வருகின்றனர்.

இதேபோல், ஏற்கனவே உரிமம் புதுப்பிக்க தவறியவர்களும், வரும் 30ம் தேதிக்குள் வந்து தங்களின் கடை உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்றும், தவறினால் சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும், என அங்காடி நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து அங்காடி நிர்வாகம் கூறியதாவது: கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காமல் ஏராளமான கடைகள் செயல்பட்டு வருவதாக அங்காடி நிர்வாக அலுவலகத்துக்கு தெரியவந்தது.

மார்க்கெட்டில் ஆய்வு செய்தபோது உரிமம் இல்லாமல் பல கடைகள் செயல்பட்டு வந்து கண்டுபிடிக்கப்பட்டது. உரிமம் புதுப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், உரிமம் புதுப்பிக்க தவறிய 50 கடைகளுக்கு சீல் வைத்துள்ளோம். வரும் 30ம் தேதிக்குள் உரிமம் புதுப்பிக்க தவறிய கடைகளை கண்டறிந்து, அந்த கடைகளுக்கு விரைவில் சீல் வைக்கப்படும்.

3 வருடங்களுக்கு ஒருமுறை வியாபாரிகள் அவர்களது கடையின் உரிமத்தை புதுப்பிக்க 2024 முதல் 2027ம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை புதுப்பித்துகொள்ள வியாபாரிகளுக்கு அறிவித்துள்ளோம். 2024 முதல் 2027ம் ஆண்டுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, கடை உரிமம் புதுப்பிக்காத வியாபாரிகள் உடனடியாக புதுப்பித்துக்கொள்ள அங்காடி நிர்வாக சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தவறினால், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இவ்வாறு தெரிவித்தனர்.

 

The post கோயம்பேடு மார்க்கெட்டில் உரிமம் புதுப்பிக்காத கடைகளுக்கு சீல்: அங்காடி நிர்வாகம் எச்சரிக்கை, கணக்கெடுப்பு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Dinakaran ,
× RELATED கோயம்பேடு பார்க்கிங் பகுதியில் ஆம்னி...