×

கோபி அருகே கூடுதலாக 20 நாளுக்கு குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

 

கோபி, ஜூலை 21: கோபி அருகே குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக கூடுதலாக 20 நாட்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீர் திறந்தனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே குன்றி மலையடிவாரத்தில் 42 அடி உயரத்தில் 900 மீட்டர் நீளத்திற்கு குண்டேரிப்பள்ளம் அணை அமைக்கப்பட்டுள்ளது. குன்றி, விளாங்கோம்பை, கடம்பூர் உள்ளிட்ட வன பகுதியில் பெய்யும் மழை நீர் 10க்கும் மேற்பட்ட காட்டாறுகள் வழியாக இந்த அணைக்கு தண்ணீர் வந்தடைகிறது. அணையில் இருந்து வினோபா நகர், வாணிபுத்தூர், மோதூர், கொங்கர் பாளையம் உள்ளிட்ட 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள 2 ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் ஆண்டு முழுவதும் பாசன வசதி பெற்று வருகிறது.

இந்நிலையில் அணையில் இருந்து கடந்த 3 மாதங்களுக்கு முன் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் கடைமடை பகுதியில் பயிர்கள் அறுவடைக்கு தயாராகாத நிலையில் பாசனத்திற்காக கூடுதலாக 20 நாட்கள் தண்ணீர் திறக்க அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதைத்தொடர்ந்து கூடுதலாக 20 நாட்கள் தண்ணீர் வழங்க அரசு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து அணையின் இடது மற்றும் வலது கரை என இரு வாய்க்கால்களிலும் நீர்வள ஆதாரத்துறை உதவி பொறியாளர் ரத்தினகிரி, குண்டேரிப்பள்ளம் அணை பாசன விவசாயிகள் சங்க தலைவர் குப்புராஜ் உள்ளிட்ட பலர், அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்தனர்.

வலது கரை வாய்க்காலில் 15 கன அடி தண்ணீரும் இடது கரை வாய்க்காலில் 9 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்ட நிலையில் 10 நாட்கள் தண்ணீர் வழங்கப்பட்டு 4 நாட்கள் இடையில் தண்ணீர் நிறுத்தப்படும் என்றும் அதைத்தொடர்ந்து மறுபடியும் 10 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். பாசனத்திற்காக 20 நாட்கள் கூடுதலாக தண்ணீர் திறக்கப்பட்டது, விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

The post கோபி அருகே கூடுதலாக 20 நாளுக்கு குண்டேரிப்பள்ளம் அணையில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Kunderipallam dam ,Gobi ,
× RELATED மினி வேனில் மணல் கடத்தல் டிரைவர் தலைமறைவு