×

கோட்டை மாரியம்மன் கோயிலில் 25ம் தேதி பூச்சாட்டுதல் விழா

சேலம், ஜூலை 4: ஆடி திருவிழாவை முன்னிட்டு சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வரும் 25ம் தேதி பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டையொட்டி கோட்டை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் அம்மனுக்கு 22 நாட்கள் ஆடித்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலில் பொங்கல் வைத்து மாவிளக்கு போட்டு அம்மனை வழிப்படுவார்கள். இதைதவிர கோயிலில் உருளுதண்டம், அக்னி கரகம், அலகுகுத்தி கோயிலுக்கு பக்தர்கள் வருகை தருவார்கள்.

கோயிலில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக திருப்பணிகள் நடப்பதால் பொங்கல் வைபோகம் நிகழ்ச்சி மட்டுமே நடைபெற்று வருகிறது. தற்போது கோயிலில் 85 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. நடப்பாண்டு புதிய கோயிலில் ஆடித்திருவிழா கொண்டாடப்பட வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில் நடப்பாண்டு ஆடித்திருவிழா கொண்டாட சேலம் மாநகரத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோயில்களில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் சேலம் கோட்டை மாரியம்மன் கோயிலில் வரும் 25ம் தேதி இரவு பூச்சாட்டுதல் விழா நடக்கிறது. ஆகஸ்ட் 7ம் தேதி சக்தி அழைப்பும், 9ம் தேதி முதல் 11ம் தேதி பொங்கல், மாவிளக்கு, பிரார்த்தனை நிகழ்ச்சி நடக்கிறது. 15ம் தேதி காலை 10 மணிக்கு பால்குட விழா, மகா அபிஷேகம், உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் மற்றும் அன்னதானம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

The post கோட்டை மாரியம்மன் கோயிலில் 25ம் தேதி பூச்சாட்டுதல் விழா appeared first on Dinakaran.

Tags : Kota Mariamman Temple ,Salem ,Adi festival ,Fort Mariyamman temple ,
× RELATED சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ₹4.80 கோடி நிதி