×

கோடை காலங்களில் விவசாயிகளே உஷார் கால்நடைகளை தாக்கும் புதுப்புது நோய்கள்: சிறப்பு முகாம்கள் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மதுரை, ஏப்.12: தமிழ்நாட்டில் கோடைகாலத்தில் கால்நடைகளை தொற்று நோய் அதிகம் தாக்குகிறது. தென் மாவட்டங்களில் குறிப்பாக மதுரையில் பகல் நேர வெப்பமானது 100 டிகிரிக்கு மேல் செல்கிறது. மாடு, எருமை, ஆடு மற்றும் கோழிகளின் இயற்கையான வாழ்வியல் சராசரி வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆகும். குளிர்காலத்தில் குறைந்த பட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியசில் இருந்து கோடைகால துவக்கத்தில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாண்டும் போது கால்நடைகளில் பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கால்நடைகளின் சுவாச துடிப்பு மற்றும் இதய துடிப்பு அதிகரிக்கும். இதனால் தீவனம், தண்ணீர் உட் கொள்ளும் அளவு குறைந்து உடல் வளர்ச்சி குறைகிறது. கால்நடைகளின் உற்பத்தி திறன் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் குறைகிறது. கால்நடைகளில் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாகிறது.

கால்நடைகளை கோடைகால தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்க தேசிய கால்நடை நோய்கள் தடுப்பு திட்டத்தில் தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மாடுகளுக்கு பல்வேறு தடுப்பூசிகள் போட்டும், முகாம்கள் அமைத்தும் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. கோடை கால துவக்கத்தில் உண்ணிகள், பூச்சிகள் மற்றும் கொசுக்கள் எண்ணிக்கை பல மடங்கு பெருகும். இதை தடுக்க இவை பெருகும் இடங்களான கெட்டுப்போன தீவனங்கள், மரங்கள், தேங்கிய சாக்கடை தண்ணீர் மற்றும் நாள்பட்ட சாணம் போன்றவற்றை அகற்றி, கால்நடை கொட்டகைகளை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இதன் மூலம் உண்ணிகள், பூச்சிகள் மற்றும் கொசுக்கள் கட்டுப்படுத்தப்படும். மாதம் ஒருமுறை உண்ணி மருந்துகளை கால்நடை கொட்டகைகளில் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி தெளிப்பதன் மூலம் உண்ணி, பூச்சி, ஈக்கள் மற்றும் கொசுக்களை கட்டுப்படுத்தலாம்.

கோடைகால வெப்பத்தை சமாளிக்க கால்நடைகளுக்கு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிக வெப்பத்தை குறைக்க கால்நடை கொட்டகையில் மின்விசிறிகள் அமைத்தல், நீர் தெளிப்பான்கள் அமைத்தல், கால்நடைகளுக்கு பகல் முழுவதும் குடிநீர் கிடைத்திட ஏற்பாடு செய்ய வேண்டும். கலப்பின மாடுகள், ஆடுகள் மற்றும் கோழிகள் கோடைகால வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்படுவதால், நிழல் தரும் கொட்டகை, காற்றோட்டமான இடம், உடல் சூட்டை தணிக்கும் பசுந்தீவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
வெப்ப அழற்சியால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு ரெஸ்டோபால் போன்ற ஆயுர்வேத மருந்துகள் நல்ல தீர்வாக அமையும். இது குறித்து கால்நடை உதவி மருத்துவர் சரவணன் கூறியதாவது: கோமாரி நோய், ஆந்த்ராக்ஸ் நோய் மற்றும் அம்மை நோய்களுக்கு கோடைகாலத்திற்கு முன் கால்நடை மருத்துவர் ஆலோசனைப்படி தடுப்பூசி போட வேண்டும்.

ஆடுகளுக்கு பிபிஆர் தடுப்பூசி, அம்மை தடுப்பூசி, மற்றும் ஹச்எஸ் தடுப்பூசி போட வேண்டும். கோழிகளுக்கு ராணிகெட் தடுப்பூசி, கோழி அம்மை தடுப்பூசி போட வேண்டும். கோடைகால மடிவீக்க நோயை தடுக்க விட்டமின் எடிஹச் கலவையை கால்நடைகளுக்கு மருத்துவர் பரிந்துரைப்படி தினசரி அளிக்க வேண்டும். கோடை கால வெயில் தாக்கத்தால் சினைமாடுகள், கன்று மாடுகள், சினைஆடுகள் மற்றும் குட்டி போட்ட ஆடுகள் அதிகம் பாதிக்கப்படும். பாதிப்பை குறைக்க காற்றோட்டமான இடம், குளிர்ச்சியான குடிநீர் மற்றும் பசுந்தீவனம் பகல் முழுவதும் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். விட்டமின் ஏடிஹச் டானிக் மருந்தை மருத்துவர் பரிந்துரைப்படி சினைமாடுகளுக்கு கொடுக்க வேண்டும். குளிர்ச்சியான பகுதிகளில் வளர்க்கப்படும் பசுக்கள், ஆடுகள் மற்றும் கோழிகளை கோடை வெப்பம் அதிகம் உள்ள பகுதிகளில் வாங்கி வளர்க்க கூடாது. மருத்துவரின் ஆலோசனைப்படி பணிகளை மேற்கொண்டால் மாடுகளில் கோடைகால தொற்று நோய் வராமல் தடுக்கலாம். மேலும் கால்நடை அலுவலகங்கள் மூலம் கோடைகால தொற்று நோய் பாதிப்பிலிருந்து தப்புவதற்கான வழிகாட்டு தகவல்கள் வழங்கவும் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post கோடை காலங்களில் விவசாயிகளே உஷார் கால்நடைகளை தாக்கும் புதுப்புது நோய்கள்: சிறப்பு முகாம்கள் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,
× RELATED கட்டணத்தை உயர்த்தினாலும் முறையாக...