×

கொலிஜியத்தால் நீதி பாதிக்கிறது நீதிபதிகளை நியமிப்பது ஒன்றிய அரசின் வேலை: ஒன்றிய சட்ட அமைச்சர் சர்ச்சை

புதுடெல்லி: ‘அரசியல் சாசனப்படி நீதிபதிகளை தேர்வு செய்வது அரசின் கடமை. நீதிபதிகளே நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியம் அமைப்பு மீது மக்கள் மகிழ்ச்சி அடையவில்லை’ என ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. குஜராத்தின் அகமதாபாத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பங்கேற்று பேசியதாவது: அரசியலமைப்பு சட்டத்தில், ஜனாதிபதிதான் நீதிபதிகளை நியமிப்பார் என தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதாவது சட்ட அமைச்சகம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்து நீதிபதிகளை நியமிக்க வேண்டும். இதன்படி நீதிபதிகளை நியமிப்பது அரசின் கடமை. ஆனால், கொலிஜியம் அமைப்பு மூலம் நீதிபதிகளே நீதிபதிகளை தேர்வு செய்கின்றனர். இப்படிப்பட்ட நடைமுறை இந்தியாவை தவிர வேறெந்த நாட்டிலும் இல்லை. நீதிபதிகள் தேர்வு செய்வதிலேயே நீதிபதிகள் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது நீதி வழங்கும் பணியையும் பாதிக்கச் செய்கிறது. எனவேதான், கொலிஜியம் அமைப்பு மீது மக்கள் மகிழ்ச்சி அடையவில்லை என்பதை நான் அறிவேன். இவ்வாறு அவர் பேசினார்.* நீதித்துறையை கட்டுப்படுத்த எந்த வழிமுறையும் இல்லை‘நீதிபதிகளை தேர்வு செய்வதில்  நீதிபதிகளுக்கு உள்ளேயே கருத்து வேறுபாடுகள் ஏற்படுகிறது. அரசியல் தலைவர்களிடையே நடக்கும் அரசியலை மக்கள் பார்க்கிறார்கள். ஆனால், நீதித்துறையில் நடக்கும் அரசியல் அவர்களுக்கு தெரியாது. நிர்வாகம், நாடாளுமன்றம், நீதித்துறை என 3 தூண்கள் நம்மிடம் உள்ளன. இதில், நிர்வாகமும், சட்டமன்றமும் நீதித்துறையால் கட்டுப்படுத்தப்பட்டு ஒழுங்குபடுத்தப்படுகிறது. ஆனால், நீதித்துறை தவறான பாதையில் சென்றால் அதை கட்டுப்படுத்த எந்த வழிமுறையும் இல்லை,’ என்றும் ரிஜுஜூ பேசினார்….

The post கொலிஜியத்தால் நீதி பாதிக்கிறது நீதிபதிகளை நியமிப்பது ஒன்றிய அரசின் வேலை: ஒன்றிய சட்ட அமைச்சர் சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Union Govt ,Union ,New Delhi ,Union Government ,Union Law ,Dinakaran ,
× RELATED முதுநிலை நீட்தேர்வு தள்ளிவைப்பு...