×

கொரோனா காலத்தில் மன அழுத்தத்துடன் கடமையாற்றும் போலீசாரை அச்சுறுத்துவோரிடம் மென்மையாக இருக்க மாட்டோம்: ஐகோர்ட் கிளை நீதிபதி எச்சரிக்கை

மதுரை: கொரோனா காலத்தில் ஏற்கனவே மன அழுத்தத்துடன் கடமையாற்றும் போலீசாரை அச்சுறுத்துவோரிடம் நீதிமன்றம் மென்மையாக இருக்கப்போவதில்லை என்று ஐகோர்ட் கிளை நீதிபதி எச்சரித்துள்ளார். திருச்சி, தெப்பக்குளத்தான்கரை பகுதியில் போலீசார் கடந்த மாதம் ரோந்து சென்றனர். அப்போது சில இளைஞர்கள் முகக்கவசம் அணியாமல் ஆட்டோவில் சென்றுள்ளனர். இதைப் பார்த்த போலீசார், இளைஞர்களிடம், ‘‘ஏன் முகக்கவசம் அணியாமல் செல்கிறீர்கள்?’’ என ேகட்டுள்ளனர். அப்போது அந்த இளைஞர்கள், போலீசாரை தள்ளி விட்டு தப்பி ஓடினர். இதுதொடர்பாக திருச்சி கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் 4வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள காஜா (எ) காஜா உசேன், தனக்கு முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அரசு வக்கீல் ரவி ஆஜராகி, ‘‘இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 பேர் தலைமறைவாக உள்ளனர்’’ என்றார்.இதையடுத்து நீதிபதி, ‘‘மனுதாரர் விதிகளை பின்பற்றவில்லை. இதுகுறித்து கேட்ட போலீசாரை பணிசெய்ய விடாமல் தடுத்துள்ளார். கொரோனா காலத்தில் போலீசார் ஏற்கனவே அதிக மன அழுத்தத்தில் பணியாற்றுகின்றனர். ஒரு வைரஸ் பலரது உயிரை எடுத்துச் செல்லும் சூழலில் ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்பட வேண்டும். தங்களது பணியை மேற்கொள்ளும் காவல்துறையினர் கேள்வி கேட்டால், உரிய முறையில் விளக்கமளிக்க வேண்டும். காவல்துறையினரிடம் அதிகார துஷ்பிரயோகம் செய்வது, அச்சுறுத்துவது போன்றவற்றை ஏற்க முடியாது. காவல்துறையினர் தங்கள் கடமையை செய்யும்போது, அவர்களை  அச்சுறுத்தும் விவகாரங்களில் நீதிமன்றம் மென்மையாக இருக்கப் போவதில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரை மனுதாரர் இனிமேல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டேன் என மன்னிப்பு கோரி ஐகோர்ட் கிளை பதிவுத்துறையில் பிரமாண பத்திரம் (அபிடவிட்) தாக்கல் செய்யவேண்டும். இதோடு, இழப்பீடாக ரூ.10 ஆயிரத்தை மதுரை வழக்கறிஞர்கள் எழுத்தர் நலச் சங்கத்திற்கு செலுத்த வேண்டும். இந்த மனு மீதான விசாரணை ஜூன் 14க்கு தள்ளி வைக்கப்படுகிறது. அதுவரை மனுதாரரை போலீசார் கைது செய்யக்கூடாது’’ என உத்தரவிட்டுள்ளார்….

The post கொரோனா காலத்தில் மன அழுத்தத்துடன் கடமையாற்றும் போலீசாரை அச்சுறுத்துவோரிடம் மென்மையாக இருக்க மாட்டோம்: ஐகோர்ட் கிளை நீதிபதி எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags :
× RELATED போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும்...