ஊட்டி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் 4வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கேரளாவை சார்ந்த ஜம்சீர் அலி மற்றும் 10வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் ஆகியோரை விசாரிக்க தனி படை போலிசார் முடிவு செய்துள்ளனர். மேலும், காவலாளி கிருஷ்ணதாபாவிடம் விசாரணை நடத்த தனிப்படை போலீசார் நேபாளம் செல்ல திட்டமிட்டுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவிற்கு சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களாக்கள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அடுத்த கொடநாட்டில் உள்ளன. இங்கு கடந்த 2017, ஏப்ரல் 23ம் தேதி ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவரான ஆத்தூர் பகுதியை சேர்ந்த கனகராஜ் தலைமையில் 11 பேர் கொண்ட கொள்ளை கும்பல் நுழைந்தது. அங்கு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை அக்கும்பல் கொலை செய்தது. பின்னர், ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் தங்கும் அறைகளுக்குள் நுழைந்து அங்கிருந்து பல்வேறு பொருட்கள் மற்றும் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இவ்வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சயான் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் டெல்லியில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் பத்தரிகையாளர்களுக்கு ஒரு பேட்டி அளித்தனர். அப்போது, முன்னாள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமிக்கும் இந்த கொலை வழக்கில் தொடர்பு உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.2 ஆண்டுகளுக்கு பின் சயான் கடந்த மாதம் ஜாமீனில் வெளியே வந்தார். இவ்வழக்கில் மேலும் பல புதிய உண்மை தகவல்களை அளிக்க வேண்டும் என சயான், போலீசாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து கடந்த மாதம் 17ம் தேதி அவரிடம் மீண்டும் வாக்குமூலம் பெறப்பட்டது. இவ்வழக்கு விசாரணை கடந்த 2ம் தேதி ஊட்டி நீதிமன்றத்தில் நடந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள், விசாரணை மேற்கொள்ள 4 வாரம் அவகாசம் அளிக்க வேண்டும்’ என கேட்டு கொண்டனர். இதனை தொடர்ந்து, நீதிபதி சஞ்சய்பாபா 4 வாரம் அவகாசம் அளித்து வழக்கை அக்டோபர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.இதைத்தொடர்ந்து, இவ்வழக்கை விசாரிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டன. மேலும், முக்கிய சாட்சிகளிடம் ஐஜி சுதாகர் நேரடியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார். கடந்த வாரம் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜனிடம் ஐஜி தலைமையில் போலீசார் ஊட்டி பழைய எஸ்பி அலுவலகத்தில் விசாரணை நடத்தினர். குற்றவாளிகளின் உறவினரிடமும், பார் உரிமையாளர் அணீஷ் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அரசு தரப்பு சாட்சிகளாக 101 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளன. தற்போது, முக்கிய சாட்சிகளை மீண்டும் அழைத்து விசாரித்து வரும் நிலையில், மேலும் பலரிடம் போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.வழக்கு விசாரணை வேகம் எடுத்துள்ள நிலையில், கேரள மாநிலம் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் நேற்று விரைந்தனர். இதற்கிடையே நேற்று ஊட்டி பழைய எஸ்பி அலுவலகத்தில் ஐஜி சுதாகர், டிஐஜி முத்துசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. கொடநாடு எஸ்டேட்டில் கொலை செய்யப்பட்ட காவலாளி ஓம்பகதூருடன், மற்றொரு காவலாளியான கிருஷ்ணதாபா மற்றொரு கேட்டில் பணியாற்றி வந்தார். அப்போது கொலை மற்றும் கொள்ளை தொடர்பாக அவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்கு பின்னர் அவர் குடும்பத்துடன் நேபாளத்துக்கு சென்று விட்டார். இதற்கிடையே கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு மறு விசாரணை தொடங்கி உள்ள நிலையில், கிருஷ்ணதாபாவிடம் மீண்டும் விசாரிக்க தனிப்படை போலீசார் நேபாளம் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஊட்டி பழைய கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் 2 பிரிவாக பிரிந்து, அதில் ஒரு கும்பல் கூடலூர் வழியாக காரில் தப்பி சென்றது. அந்த கும்பலுக்கு கார் வழங்கிய உரிமையாளர் நவுசத், ஏஜெண்ட் நவுபல் ஆகியோர் அரசு தரப்பில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரிடமும் ஊட்டி பழைய எஸ்பி அலுவலகத்தில் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்துகின்றனர்….
The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜித்தின் ஜாய் ஆகியோரை விசாரிக்க தனி படை போலிசார் முடிவு appeared first on Dinakaran.