குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி மோப்ப நாய் உதவியுடன் ஒரு மணி நேரம் சோதனை

தாம்பரம்: குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து, தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ரயில்வே போலீசார் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்தனர். காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு நேற்று மாலை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் குருவாயூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு வந்து கொண்டிருக்கும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக கூறி இணைப்பை துண்டித்துள்ளார். இதனைத் தொடர்ந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் வழித்தடங்களில் உள்ள ரயில் நிலையங்களின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உஷார் செய்யப்பட்டது. இந்த தகவல் கிடைத்தவுடன் செங்கல்பட்டு ரயில்வே போலீசார் ரயில் நிலையத்திற்கு செல்வதற்குள் செங்கல்பட்டு ரயில் நிலையத்தை ரயில் கடந்து சிங்கப்பெருமாள் கோயில் சென்று விட்டதால் உடனடியாக இதுகுறித்து தாம்பரம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தாம்பரம் ரயில் நிலையத்தில் தாம்பரம் காவல் நிலைய போலீசார், தாம்பரம் ரயில்வே காவல் நிலைய போலீசார், தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையினர் என 20க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையத்தில் குவிய தொடங்கினர். தாம்பரம் ரயில்வே பாதுகாப்பு படையை சேர்ந்த டயானா என்ற மோப்பநாய் வரவழைக்கப்பட்டிருந்தது. தாம்பரம் மாநகர காவல் ஆணையரக அலுவலகத்தில் இருந்து இரண்டு வெடிகுண்டு நிபுணர்கள் வந்திருந்தனர். அனைவரும் தாம்பரம் ரயில் நிலையத்தில் தயார் நிலையில் காத்துக் கொண்டிருந்தனர். இரவு 7.45 மணி அளவில் தாம்பரம் ரயில் நிலைய 5வது நடை மேடைக்கு குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்து நின்றது.இதனை அடுத்து தாம்பரம் ரயில் நிலையத்தில் தயார் நிலையில் இருந்த போலீசார் ரயிலின் அனைத்து பெட்டிகளிலும் ஏறி ஒவ்வொரு பெட்டிகளிலும் இருந்த பயணிகளின் பைகளை மோப்ப நாய் டயானா மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் சோதனையிட்டனர். இந்த திடீர் சோதனையினால் பயணிகள் என்ன, ஏது என்று தெரியாமல் குழப்பத்தில் திகைத்து நின்றனர். ரயில் புறப்பட தாமதமாகும் என போலீசார் தெரிவித்ததையடுத்து எழும்பூர் ரயில் நிலையம் செல்லும் பெரும்பாலான பயணிகள் தங்களது பைகளை எடுத்துக் கொண்டு ரயிலில் இருந்து கீழே இறங்கி மின்சார ரயில் மூலம் செல்வதற்காக சென்றனர். ரயிலில் முழுமையாக சோதனை நடைபெற்று முடிந்த பின், எந்த வெடி பொருளும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. மர்ம மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து இரவு 8.57 மணியளவில் ரயில் மீதம் இருந்த பயணிகளுடன் எழும்பூர் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டு சென்றது. இந்த வெடிகுண்டு சோதனையால் தாம்பரம் ரயில் நிலையத்தில் நேற்று இரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

The post குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி மோப்ப நாய் உதவியுடன் ஒரு மணி நேரம் சோதனை appeared first on Dinakaran.

Related Stories: