×

குமரி கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூடைகள்: வெளிமார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்கும் விவசாயிகள்

நாகர்கோவில்: செண்பராமன்புதூர் நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து குறைந்த அளவு நெல்கொள்முதல் செய்வதால், வெளிமார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விவசாயிகள் நெல் விற்பனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப்பூ என்று இருபோக சாகுபடி நடந்து வருகிறது. கும்பப்பூ சாகுபடி வடக்கிழக்கு பருவமழை காரணமாக தாமதம் ஏற்பட்டது. இதனால் தற்போதும் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட நிர்வாகம் கிருஷ்ணன்கோவில், திங்கள்நகர், தேரூர், செண்பராமன்புதூர், பறக்கை, சிறமடம், கடுக்கரை உள்ளிட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்துள்ளது. தற்போது நெல்கொள்முதல் நிலையங்களில் குவிண்டாலுக்கு ரூ.2015 விலை கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.குமரி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து பெரும்பாலான நெல், கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல்களை நுகர்பொருள் வாணிபகழக நிர்வாகம் கொள்முதல் செய்து, அதனை அரிசி ஆலைகளில் கொடுத்து அரிசியாக வாங்கி வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் செண்பராமன்புதூர் பகுதியில் அறுவடை பணிகள் நடந்து வருகிறது. இதற்கு முன்பு அறுவடை செய்யப்பட்ட நெல்லை, செண்பராமன்புதூரில் உள்ள நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் கொடுத்துள்ளனர்.செண்பராமன்புதூர் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்கள் அப்படியே அங்கே வைக்கப்பட்டுள்ளதால், கொள்முதல் நிலையத்தில் நெல் மூடைகள் குவிந்துள்ளது. கொள்முதல் நிலையத்தின் வெளியே தார்பாயில் நெல்களை போட்டு வைத்துள்ளனர். தற்போது விவசாயிகள் கொண்டுவரும் நெல்களில் ஒருபகுதியை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் வெளி மார்க்கெட்டில் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது ஒரு கிலோ நெல் ரூ.20.15க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கிறது. குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் கொள்முதல் செய்யப்படும் நெல்லை அங்கேயயே போட்டு வைப்பதால், விவசாயிகளிடம் இருந்து தொடர்ந்து நெல் கொள்முதல் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செண்பராமன்புதூர் கொள்முதல் நிலையத்தில் நெல்மூடைகள் நிரம்பி வெளியே நெல்லை கொட்டி வைத்துள்ளனர். மழை நேரத்தில் தார்பாய் கொண்டு நெல்லை மூடுகின்றனர். கொள்முதல் நிலையத்தில் அதிக அளவு நெல் உள்ளதால், விவசாயிகளிடம் இருந்து தற்போது குறைந்த அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் வெளிமார்க்கெட்டில் ஒரு கோட்டை (87 கிலோ) ரூ.1200க்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை அடைந்துள்ளனர். செண்பராமன்புதூரில் தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்காமல் இருக்க, செண்பராமன்புதூர் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல்லை அரிசி அலைகளுக்கு நுகர்பொருள் வாணிபகழக நிர்வாகம் எடுத்துச்செல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்றனர்….

The post குமரி கொள்முதல் நிலையத்தில் தேங்கி கிடக்கும் நெல் மூடைகள்: வெளிமார்க்கெட்டில் குறைந்த விலைக்கு விற்கும் விவசாயிகள் appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Chenparamanputur ,
× RELATED குமரி மாவட்டத்தில் மாலை நேர ரோந்தில் போலீசார் ஈடுபடுவார்களா?