நியூயார்க்: தங்களின் சுயமுயற்சியால் கோடீஸ்வரரான 2 இந்திய வம்சாவளி பெண்களின் பெயர்கள், போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. அமெரிக்காவில் இருந்து வெளியாகும் போர்ப்ஸ் இதழ், உலக பணக்காரர்கள் பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில், தனது சுயமுயற்சியால் வியாபாரத்தில் வெற்றியடைந்து அமெரிக்காவில் கோடீஸ்வரர்களாக உயர்ந்த 60 பெண்களின் பட்டியலை தற்போது அது வெளியிட்டுள்ளது. இதில், இந்திய வம்சாவளியை சேர்ந்த தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் 2 பணக்கார பெண்களும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் ஜெய உல்லால், நீரஜா சேதி ஆகியோர் ஆவர். போர்ப்ஸ் இதழில் கூறப்பட்டு இருப்பதாவது:
லண்டனில் பிறந்து இந்தியாவில் வளர்ந்த பெண் ஜெய உல்லால் (57) மற்றும் நீரஜா சேதி (63), ஆகியோர் பின்புலம் எதுவும் இன்றி சுயமாக தொழில் தொடங்கி உலக பணக்காரர்களாக உயர்ந்தவர்கள். இந்த பட்டியலில் ஜெய உல்லாலுக்கு 18வது இடமும், நீரஜா சேதிக்கு 21வது இடமும் கிடைத்துள்ளது. இவர்களில் ஜெய, அமெரிக்காவில் கடந்த 2008ம் ஆண்டு ெதாடங்கப்பட்ட அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். இவரது சொத்து மதிப்பு 1.3 பில்லியன் டாலர். இது இந்திய ரூபாய் மதிப்பில் 8 ஆயிரத்து 917 கோடியே 35 லட்சமாகும்.
இரண்டாவது இடத்தில் உள்ள நீரஜா சேத்தின் சொத்து மதிப்பு 1 பில்லியன் டாலர். இந்திய மதிப்பில் 6 ஆயிரத்து 860 கோடியே 50 லட்சம் ரூபாய்.
அமெரிக்காவில் ‘சின்டல்’ என்ற தகவல் தொழில்நுட்ப மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ள நீரஜா சேத் தனது கணவர் பரத் தேசாயுடன் இணைந்து கடந்த 1980ம் ஆண்டில் மிக்சிகனில் உள்ள தனது வீட்டில் இந்த நிறுவனத்தை தொடங்கினார். வெறும் 2 ஆயிரம் அமெரிக்க டாலர் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த நிறுவனத்தின் கடந்தாண்டு வருமானம் 924 மில்லியன் அமெரிக்க டாலராகும். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 60 பெண்களின் மொத்த சொத்து மதிப்பு 71 பில்லியன் டாலராகும். இது கடந்த ஆண்டை விட 15 சதவீதம் அதிகம். இந்த பட்டியலில் முதலிடம் பிடித்திருப்பவர் விஸ்கான்சின் மாகாணத்தை சேர்ந்த டாயனே ஹென்டிரிக்ஸ். இவர் மேற்கூரைக்கான பொருட்கள் மற்றும் ஜன்னல்கள் தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த பட்டியலில் உள்ளவர்களில் 7 பேர் புதுவரவு. இந்த பட்டியலில் 21 வயதாகும் குயிலி ஜென்னர் என்ற டிவி நடிகையும் இடம்பெற்றுள்ளார்.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!
