×

தேர்தல் விழிப்புணர்வு கோலப்போட்டி

சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு விருப்பத்தின் பேரில் தபால் வாக்கு செலுத்த வழிவகை செய்யப்படும் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். சட்டமன்ற தேர்தல் குறித்து வாக்காளர்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரங்கோலி கோலப்போட்டி நடந்தது. ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள ஹெலிபேட் தளத்தில் நடந்த போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார். அப்போது கலெக்டர் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் சுருக்கம் 2021 அடிப்படையில் இறுதி வாக்காளர் பட்டியில் ஜன.21ம் தேதி வெளியிடப்பட்டது.

5 லட்சத்து 76 ஆயிரத்து 343 ஆண் வாக்காளர்களும், 5லட்சத்து 81ஆயிரத்து 132 பெண் வாக்காளர்களும், 65 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 11 லட்சத்து 57 ஆயிரத்து 540 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 276 வாக்கு செலுத்தும் இயந்திரங்கள், 2ஆயிரத்து 160 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2ஆயிரத்து 302 வாக்காளர் சரிபார்க்க கூடிய காகித தணிக்கை இயந்திரங்கள் பாதுகாப்பாக அந்தந்த தொகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறையின் படி 1,369 வாக்குச்சாவடி மையங்கள், 1,647 வாக்குச்சாவடி மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் 80 வாக்குச்சாவடி மையங்கள் பதட்டமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இங்கு வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்படும். தொழில்நுட்ப உதவியுடன் தேர்தல் கட்டுபாட்டு அறையின் மூலம் நேரடியாக கண்காணிக்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடானை, ராமநாதபுரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதியிலும் பறக்கும் படை, நிலைக்கதக்க கண்காணிப்புக் குழு, தலா ஒரு வீடியோ கண்காணிப்பு குழு என மொத்தம் 28 குழு 8 மணி நேரம் ஷிப்ட் முறையில் பணியாற்றி வருகின்றனர். இந்த குழுவினர் சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து வரப்பட்டதாக இதுவரை ரூ.36 லட்சத்து 48ஆயிரத்து 420 கைப்பற்றியுள்ளனர். பொதுமக்கள் தேர்தல் தொடர்பான புகார்கள், குறைகளை 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை பயன்படுத்தி பேசலாம். மேலும் 80 வயதிற்கு மேற்பட்டோர் விருப்பத்தின்பேரில் தபால் வாக்கு செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 
பொதுமக்கள் எவ்வித தூண்டுதலின்றி சுதந்திரமாக விழிப்புடன் வாக்கு செலுத்த 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதலில் ராமநாதபுரத்தில் துவக்கப்பட்டுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில் எஸ்.பி. கார்த்திக், கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிவகாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Election Awareness Match
× RELATED மீண்டும் அறிமுகமான முதல்...