×

குடிசை தொழிலாக மாறிய நீலகிரி தைலம் உற்பத்தி:அரசு நிதியுதவி, மானிய உதவி கிடைக்குமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு

குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியமாக குடிசைகளில் தயாராகும் நீலகிரி தைல தொழிலை காப்பாற்ற அரசு சார்பில் மானிய உதவி, நிதி உதவி செய்ய வேண்டும் என தொழிலாளர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நீலகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் ஊருக்கு திரும்பும்போது ஊட்டி நெய்வர்க்கி, ஹோம் மேட் சாக்லெட், உள்ளிட்ட உணவு பொருட்களையும், யூகலிப்டஸ் ஆயில் எனப்படும் நீலகிரி தைலத்தையும் தவறாமல் வாங்கி செல்வது வழக்கமாக இருக்கிறது. இதில், நீலகிரி தைலம் மருத்துவ குணம் வாய்ந்தது. அழகு சாதன பொருளாகவும் உள்ளது. மிக சிறந்த வலி நிவாரணியாகவும் சளி, இருமல் தும்மல் உள்ளிட்ட நோய்களுக்கு எளிதில் தீர்வு தரும் எனவும் பொதுமக்கள் நம்புகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் யூகலிப்டஸ்  சோலையில் இருந்து இலைகளை சேகரித்து அவற்றை பதப்படுத்தி குறிப்பிட்ட வெப்பநிலையில் தைலமாக காய்ச்சப்படுகிறது. சுமார் 8 மணிநேரம் பதப்படுத்தினால் 4 லிட்டர் வரை சுத்தமான தைலம் கிடைக்கிறது. இதையடுத்து, இந்த தைலம் டப்பாக்களில் அடைக்கப்பட்டு, இடைத்தரகர் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு போட்டியாக, ஆப்பிரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தைலம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், நீலகிரியில் உற்பத்தி செய்யப்படும் தைலத்திற்கு மார்க்கெட் விலை நாளுக்குநாள் வெகுவாக குறைந்து வருகிறது. நீலகிரி தைலம் லிட்டர் 1,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது இடைத்தரகர்கள் ஆதிக்கம் காரணமாக ரூ.950க்கும் குறைவாக தைலத்தை வாங்கி செல்லும் நிலை உருவாகியுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தைலம் லிட்டர் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கலப்பட தைலம் அதிகளவில் மார்க்கெட் கடைகளில் விற்கப்படுவதாகவும், அவற்றில் கேம்பர் ஆயில் கலப்பதாகவும் நீலகிரியில் தைல உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர். இடைத்தரகர் ஆதிக்கம் காரணமாக உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் தைலத்திற்கு விலை இல்லாததால் வருமான இல்லாத சூழல் உருவாகியுள்ளது. மேலும், இதற்கு என முன்பு போல அனுபவம் வாய்ந்த தொழிலாளிகளும் கிடைப்பது இல்லை.முறையான கூலி வழங்க முடியாததால் இவர்கள் வேறு தொழிலுக்கு மாறி வருகின்றனர். அப்படியே உற்பத்தி செய்தாலும் அதை வாங்குவதற்கு வாடிக்கையாளர்கள் யாரும் முன்வருவதில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவித்தனர். இதையடுத்து இந்த தொழிலை அடியோடு கைவிடும் சூழலிலுக்கு தைல உற்பத்தியாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து தைல உற்பத்தியாளர் பிரகாஷ் கூறுகையில்,“குடிசை தொழிலான நீலகிரி தைலம் உற்பத்தி அழிவின் விளிம்பில் உள்ளது. இதையடுத்து குடிசை தொழிலாக இதனை மேற்கொண்டு வரும் தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிதி உதவி, மானிய உதவி, இட வசதி, நவீன தயாரிப்பு முறை உள்ளிட்டவை செய்து தரப்பட வேண்டும். அப்போது தான் பாரம்பரியமாக குடிசைகளில் தயாராகும் நீலகிரி தைல தொழிலை காப்பாற்ற முடியும்’’ என்றார். …

The post குடிசை தொழிலாக மாறிய நீலகிரி தைலம் உற்பத்தி:அரசு நிதியுதவி, மானிய உதவி கிடைக்குமா? தொழிலாளர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri Balm Production ,Gunnur ,Nilagiri ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு