நெல்லை, மே 5: நெல்லை மாவட்டத்தில் கிராம பஞ்சாயத்துகளில் வறட்சியை சமாளிக்க 50 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட உள்ளதாக நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் தெரிவித்தார். நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் அவர் பேசியதாவது: நெல்லை மாவட்ட பஞ்சாயத்து சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.1.5 கோடிக்கு ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ஒவ்வொரு கவுன்சிலருக்கும் தலா ரூ.25 லட்சம் வீதம் ரூ.4 கோடி வரையில் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் வழங்கப்பட உள்ளது. அந்தத் தொகையை வைத்து கவுன்சிலர்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளை தேர்ந்தெடுத்து, அங்கு அத்தியாவசிய பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நிதியை செலவு செய்யலாம்.
அனைத்து கவுன்சிலர்களும் தங்களது பகுதிக்கு உட்பட்ட கிராம பஞ்சாயத்துகளில் முக்கிய தேவைகள் குறித்து தேர்வு செய்து அதற்கான ஆவணங்களை மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் 10 நாட்களுக்குள் ஒப்படைக்க வேண்டும். தற்போது நெல்லை மாவட்டத்தில் பருவமழை சரியாக இல்லாததால் வறட்சி ஏற்படும் நிலை உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகும். எனவே தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியினை குடிநீருக்கு முக்கியத்துவம் அளித்து ஆழ்துளை கிணறு அமைத்தல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல், குழாய் பதித்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஒதுக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள 204 பஞ்சாயத்துகளில் குறிப்பிட்ட வறட்சி கிராமங்களை தேர்ந்தெடுத்து 50 ஆழ்துளை கிணறுகள் வரை அமைக்க வேண்டும். மேலும் மாவட்டத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளில் பணியாற்றும் சுமார் 1,497 தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட பஞ்சாயத்து நிதியிலிருந்து கையுறைகள், ஆடைகள் உள்ளிட்டவற்றை ஒரு மாதத்துக்குள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சாலமோன் டேவிட், கனகராஜ், கிருஷ்ணவேணி, தனித்தங்கம், மகேஷ்குமார், பாஸ்கர், அருண்தவசு, ஜான்ஸ்ரூபா, சத்தியவாணிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
The post கிராம பஞ்சாயத்துகளில் வறட்சியை சமாளிக்க 50 ஆழ்துளை கிணறுகள் மாவட்ட பஞ். தலைவர் விஎஸ்ஆர் ஜெகதீஸ் தகவல் appeared first on Dinakaran.