×

காவேரிப்பட்டணம் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவினர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ், நாராயணமூர்த்தி மற்றும் கோவிந்தசாமி ஆகியோர் காவேரிப்பட்டணம் அடுத்த தட்டக்கல் மலையை ஆய்வு செய்தனர். அதில், கல்வெட்டுகளில் பெருமுகைப்பற்று குறித்து பல்வேறு கருத்துக்கள் நிலவிவரும் நிலையில், தட்டக்கல் மலைகளின் நடுவே சுனை அருகே பெருமுறைப்பற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் கூறியதாவது: இந்த பெருமுகையில் பைரவர் கற்சிலையை செய்து எழுந்தருளித்து சுனை ஒன்றையும் செப்பனிட்டு, இறைவனுக்கு படைக்கும் அரிசி முதலிய பொருட்களுக்காக, உதப்பிக்குட்டை என்னும் ஏரியை மான்வேலி என்னும் ஊரைச் சேர்ந்த பல்லவரையனான மலையன் என்பவன் தானமளித்த செய்தியை தெரிவிக்கிறது. இவர் செய்தளித்த பைரவர் சிற்பமானது இன்றும் பைரப்பன் கோவிலில் வழிபாட்டில் உள்ளது. இக்கல்வெட்டின் இடது மேற்புறம் பசுவும் கன்றும் கோட்டுருவமாக வரையப்பட்டுள்ளது. பெருமுகை என்ற பெயர் இப்பகுதியில் கிடைத்த கி.பி.8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் காணப்பட்டாலும், 13ம் நூற்றாண்டை சேர்ந்த இந்த இக்கல்வெட்டில் தான் இப்பெருமுகை என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தட்டக்கல் மலையே அக்காலத்தில் பெருமுகை என அழைக்கப்பட்டது உறுதியாகிறது. இம்மலையை வடக்கிலிருந்து பார்த்தால் ஒரு பூவின் மொட்டுபோல் இருப்பதைக் காணலாம். அருகில் உள்ள பெரியமலையும் மொட்டு போலவே தோற்றமளிக்கிறது. முகை என்பது மொட்டைக் குறிக்கும். பெரிய மொட்டு போன்ற மலைகளைக் கொண்ட காரணத்தால் இப்பகுதியானது பெருமுகை என அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அதியான்களைப் போன்று மலையமான்களும் சங்க காலத்திலிருந்து ஆண்டு வந்த குறுநில மன்னராவார்கள். இவர்கள் திருக்கோவிலூர் பகுதியை ஆண்டதாக சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. ராசராசனின் தாயான வானவன் மாதேவியும் மலையமான் குலத்தைச் சேர்ந்தவராவார். இவர்கள் பல்லவரையர் என்ற பட்டப்பெயரையும் கொண்டிருந்தனர். இக்கல்வெட்டுக் குறிப்பிடும் பல்லவரையனான மலையன் மான்வேலி என்ற ஊரின் தலைவனாவான். ஊத்தங்கரை வட்டம் கொண்டம்பட்டி என்ற ஊரில் உள்ள கி.பி.9ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் உதப்பியூர் என்ற ஊர் குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வில் கோவிந்தசாமி, விஜயகுமார், தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்….

The post காவேரிப்பட்டணம் அருகே 13ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Kaveripatnam ,Krishnagiri ,Krishnagiri Historical Research and Documentation Team ,Government Museum… ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...