×

காலி பணியிடங்களை நிரப்ப பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம்: கல்வித்துறை உத்தரவு

நாகர்கோவில், ஜூன் 12: பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் காலி பணியிடங்களை நேரடி நியமனம் ,பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மை குழு மூலம் தகுதிவாய்ந்த நபர்களை கொண்டு தற்காலிக அடிப்படையில் நிரப்பலாம் என்று கல்வித்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 2022-23ம் கல்வியாண்டில் காலி பணியிடங்கள், மகப்பேறு விடுப்பில் சென்றதால் ஏற்பட்ட காலி பணியிடங்கள் மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருந்தால், பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு அவர்களுக்கு மதிப்பூதியம் மாதம் ஒன்றுக்கு முறையே ரூ.12 ஆயிரம், ரூ.15 ஆயிரம் மற்றும் ரூ.18 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக வரும் ஆண்டுகளில் தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் ஆசிரியர் காலி பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை மாணவ மாணவியர் கல்வி நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்ய பள்ளி கல்வி ஆணையருக்கு அதிகாரம் அளித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது. அந்த அரசாணைப்படியும், நீதிமன்ற உத்தரவுப்படி வழிகாட்டு நெறிமுறைகளை தவறாமல் பின்பற்றி 2023-24ம் கல்வியாண்டிற்கு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு பின்னர் உள்ள காலி பணியிடங்கள், மகப்பேறு விடுப்பில் சென்றால் வரும் காலியிடம், பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக இருந்து அவற்றுள் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கு பதிலியாகவும், பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக நியமனங்களை செய்ய அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

நடப்பு 2023-24ம் கல்வியாண்டிற்கு தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும்போது கடந்த ஆண்டு 2022-23ல் மாவட்டத்தில் நியமனம் செய்யப்பட்ட தற்காலிக ஆசிரியர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கைக்கு மிகாமல் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு சென்ற ஆண்டைவிட கூடுதலாக நியமனம் செய்யப்பட தேவை இருப்பின் எவ்வளவு தேவை என்பதை கடிதம் வாயிலாக தெரிவித்து பின்னர் நியமனம் செய்துகொள்ள அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் அறிவுறுத்தப்படுகின்றனர். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post காலி பணியிடங்களை நிரப்ப பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம்: கல்வித்துறை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : School Management Committee ,Nagercoil ,
× RELATED ஆதிதிராவிடர் மேல்நிலை பள்ளிகளில்...