×

காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில் ரூ.2,250 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்து; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் நடைபெற்ற காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில் ரூ.2,250 கோடி முதலீட்டில் 37,450 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கும் வகையில் 5 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. தமிழக அரசு 2030-31ம் நிதியாண்டிற்குள் தமிழ்நாட்டினை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதற்கு பின்பு, இதுவரை 192 ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, சுமார் 3 லட்சத்து 2 ஆயிரத்து 200 பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னையில் இன்று காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் ரூ.2,250 கோடி முதலீடு மற்றும் 37,450 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 5 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி, 1. கோத்தாரி-ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட்    காலணி உற்பத்தி    2. கோத்தாரி-ஃபீனிக்ஸ் அக்கார்ட் லிமிடெட்    ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்பு    3. கோத்தாரி-ஷிணிவிஷி குழுமம்    தோல் அல்லாத காலணி உற்பத்தி    4. வேகன் குழுமம்    தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்தி    5. வாக்கரூ இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடெட் தோல் அல்லாத காலணி உற்பத்தி ஆகிய திட்டங்கள், பெரம்பலூர் மற்றும் ராணிப்பேட்டை (பனப்பாக்கம்) மாவட்டங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இதையடுத்து, காலணித்துறை மற்றும் தோல் பொருட்கள் துறையில், தமிழ்நாட்டின் பங்கினை மேலும் வலுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கை 2022-யை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். துறை வாரியாக, ஆய்வுகள் மேற்கொண்டு அத்துறை வளர்ச்சியை சீரான முறையில் நெறிப்படுத்தும் வகையில், துறை சார்ந்த கொள்கைகள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையிலும், தோல் அல்லாத காலணி பொருட்கள் துறையில் முதலீடுகளை ஈர்த்திடவும், வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்கிடவும், ஏற்றுமதியை பன்மடங்கு பெருக்கிடும் வகையிலும் இக்கொள்கை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில், சர்வதேச காலணி உற்பத்தியாளர்கள், காலணி உற்பத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் காணொலி காட்சி மூலமாக, தமிழ்நாட்டில் உள்ள சந்தை நிலவரங்களையும் அதன்மூலம் உருவாகும் முதலீடு வாய்ப்புகளையும் பற்றி உரையாடினார்கள்.  இந்த மாநாட்டில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன், எழிலன் எம்எல்ஏ, தலைமை செயலாளர் இறையன்பு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை கூடுதல் தலைமை செயலாளர் கிருஷ்ணன், வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் பூஜா குல்கர்ணி, காலணி மேம்பாட்டு மன்றத்தின் தலைவர் ராஜ்குமார் குப்தா, க்ளார்க் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் ஜொனாதன் ராம், தோல் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநர் ஆர்.செல்வம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்….

The post காலணிகள் மற்றும் தோல் துறை மாநாட்டில் ரூ.2,250 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்து; முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Shoes and Leather Department Conference ,Chief President ,B.C. G.K. Stalin ,Chennai ,CM. G.K. ,Shoes and Leather Sector Conference ,Stalin ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED சாதனை படைத்து தமிழ்நாட்டுக்கு பெருமை...