×

காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் கேட் பகுதியில் சரக்கு ரயிலில் புகை வந்ததால் திடீர் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே கார்களை ஏற்றிச்சென்ற சரக்கு ரயில், திடீரென புகை வந்ததாக கூறி ரயில்வே கேட் பகுதியில் நிறுத்தப்பட்டது. இதனால், சுமார் அரைமணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாலாஜாபாத் பகுதியில் இருந்து கார்களை ஏற்றிக்கொண்டு அரக்கோணம் மார்க்கமாக சென்ற கூட்ஸ் ரயில், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்தது.

அப்போது, காஞ்சிபுரம் கோனேரிக்குப்பம் பகுதியில் இருந்த ரயில்வே கிராசிங்கை கடக்கும்போது கூட்ஸ் ரயிலின் 4வது பெட்டியில் கரும்புகை வருவதுபோல் தெரிந்துள்ளது. இதனைக்கண்ட, அந்த பகுதி கேட் கீப்பர் ரயிலின் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. இதனால், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகில் உள்ள வையாவூர் சாலை கிராசிங்கில் இடையிலேயே கூட்ஸ் ரயில் நின்றுள்ளது.

இதனைத்தொடர்ந்து, ரயில்வே ஊழியர்கள் வந்து சோதனை செய்ததில் தீ பற்றியதற்கான எந்த அறிகுறியும் இல்லாததால் மீண்டும் ரயில் புறப்பட்டு சென்றது. இதனால், காஞ்சிபுரத்தில் இருந்து வையாவூர், மின்நகர், தர்மநாயக்கன்பட்டறை, ராஜகுளம் மற்றும் செங்கல்பட்டு புறவழிச்சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவத்தால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

The post காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் கேட் பகுதியில் சரக்கு ரயிலில் புகை வந்ததால் திடீர் நிறுத்தம்: போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kancheepuram Old Railway Station ,Kanchipuram ,Kanchipuram Old Railway Station ,Kanchipuram Old Railway Station Gate ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் கேட்...