×

காஞ்சிபுரம் அருகே 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

 

காஞ்சிபுரம், ஜன. 26: காஞ்சிபுரம் அருகே இருவேறு இடங்களில் 7 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காஞ்சிபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேசுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பாலாஜி தலைமையில் குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் இந்துமதி, குடிமைப்பொருள் தனி வருவாய் ஆய்வாளர்கள் தேவேந்திரன், பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் காஞ்சிபுரத்தை அடுத்த ஒலிமுகமதுபேட்டையில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கே தனியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மினி லாரியில் 81 மூட்டைகளில் சுமார் 4 டன் ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். இதனையடுத்து நேற்று அதிகாலையில் ஒலிமுகமதுபேட்டை வரதப்பன் தெரு பகுதியில் நடத்திய சோதனையில், தனியாக நின்றிருந்த மினிலாரியில் 46 மூட்டைகளில் 2,300 கிலோ மற்றும் 18 மூட்டைகளில் 720 கிலோ என மொத்தம் 3 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இருவேறு இடங்களில் கடத்தி வரப்பட்ட மொத்தம் 7 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த அதிகாரிகள் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினி லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.

The post காஞ்சிபுரம் அருகே 7 டன் ரேஷன் அரிசி பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Kanchipuram district ,
× RELATED போதைப்பொருள் விற்பனை செய்தால்...