×

கல்லூரி மாணவன் போல் தோளில் பை மாட்டி கஞ்சா விற்ற பண்ருட்டி போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் கைது

 

புதுச்சேரி, ஆக. 28: புதுச்சேரியில் கல்லூரி மாணவன் போல் தோளில் பை மாட்டிக் கொண்டு கஞ்சா விற்ற பண்ருட்டி போட்டோ ஸ்டூடியோ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2.3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. புதுச்சேரி ரெட்டியார்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எல்லைபிள்ளைச்சாவடி விவேகானந்தா நகர் 4வது குறுக்கு தெருவில் வாலிபர் ஒருவர் சந்தேகம்படி நின்று கொண்டிருந்தார். கல்லூரி மாணவன் போல் தோளில் பை சுமந்தபடி இருந்த அவரை பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால் அவரது பையை சோதனையிட்டனர்.

இதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்ததில், கடலூர் மாவட்டம் வடலூர் முத்துக்கிருஷ்ணன் வீதியை சேர்ந்த இசைதாசன் (31) என்பதும், பண்ருட்டியில் போட்டோ ஸ்டூடியோ நடத்தி வருவதும், அதில் போதிய வருமானம் இல்லாததால் சீக்கிரம் பணக்காரராக ஆசைப்பட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. திருவண்ணாமலையில் கஞ்சாவை வாங்கி வந்து, புதுச்சேரியில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அவர் விற்று வந்துள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 2300 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர்.

The post கல்லூரி மாணவன் போல் தோளில் பை மாட்டி கஞ்சா விற்ற பண்ருட்டி போட்டோ ஸ்டூடியோ உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Tags : Panrutti ,Puducherry ,Panruti ,Dinakaran ,
× RELATED சாலை நடுவே உள்ள கால்வாய் சிமென்ட்...