×

கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை

 

நெல்லை, ஜன. 14: பொங்கல் பண்டிகை, நாளை கொண்டாடப்படும் நிலையில் நெல்லை மாநகரின் முக்கிய சாலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், திருட்டு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக நெல்லை புதிய பஸ் நிலையம், நெல்லை மற்றும் பாளை ரயில் நிலையங்கள், நெல்லையப்பர் கோயில், டவுன் ரதவீதிகள் உள்ளிட்ட இடங்களில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். இதேபோல் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் எஸ்ஐ குலேசேகரன் தலைமையில் மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் உள்ளிட்டவை உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இங்குள்ள அனைத்து அலுவலக பகுதிகள், கார் பார்க்கிங் மற்றும் வெளிப்பகுதி வளாகம், நுழைவுவாயில், குப்பை தொட்டிகள் ஆகியவற்றில் மெட்டல் டிடெக்டர் மூலம் வெடிகுண்டு சோதனை நடத்தினர்.

அங்குலம் அங்குலமாக நடந்த இந்த சோதனையில் எந்தவிதமான வெடி பொருட்களும் இல்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் கூறுகையில், வழக்கமாக திருவிழா காலங்களில் பொதுமக்கள் கூடும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெடிகுண்டு சோதனை நடத்தப்படும். அதன்படி பொங்கல் திருநாளையொட்டி நெல்லை மாநகரில் பல்ேவறு இடங்களில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, என்றனர். இருப்பினும் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த வெடிகுண்டு சோதனையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

The post கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு சோதனை appeared first on Dinakaran.

Tags : Nellie ,Pongal festival ,Nellai ,Dinakaran ,
× RELATED மேயர்கள் அடுத்தடுத்து ராஜினாமா.! கோவை...