×

கலப்பட உணவு குறித்து புகாரளிக்க புதிய இணையதளம், செயலி அறிமுகம்

தர்மபுரி, மே 18: தர்மபுரி மாவட்டத்தில் கலப்பட உணவுகள் குறித்து புகார் அளிக்க புதிய இணையதளம் மற்றும் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ஓட்டல், பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில், பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில், அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கைகளை எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாக foodsafety.tn.gov.in என்ற புதிய இணையதளமும், டிஎன்புட்சேப்ட்டி கன்ஸ்யூமர் ஆப் என்ற செயலியையும் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதில், பொதுமக்கள் தங்களது புகார்களை டைப் செய்யாமல், மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தரமற்ற உணவு கலப்படம் உள்ளிட்ட புகார் குறித்த விவரங்களை, பொதுமக்கள் இந்த இணையதளம் அல்லது செல்போன் செயலி மூலம் புகார் அளிக்கலாம். புகார்தாரர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். புகார் அளித்த 24 மணி முதல் 48 மணி நேரத்திற்குள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். புகார் அளித்தவருக்கு உணவு பாதுகாப்பு துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஆய்வறிக்கையும் அனுப்பப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post கலப்பட உணவு குறித்து புகாரளிக்க புதிய இணையதளம், செயலி அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Darmapuri ,Dinakaran ,
× RELATED கிரகங்களும் பெயர்களும்…