×

கரும்பு லாரியை வழி மறித்து கரும்புகளை பறித்து தின்ற காட்டு யானை: சத்தியமங்கலம் அருகே பரபரப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரியை வழி மறித்து கரும்புகளை பறித்து தின்ற காட்டு யானையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காட்டு யானை கரும்பு லாரியை வழிமறித்து கரும்புகளை பறித்து தின்றதால் தமிழக கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி மலைப் பகுதியில் உள்ள மலை கிராமங்களில் அதிக அளவில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. தற்போது கரும்பு அறுவடை பணி நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட கரும்புகள் லாரிகளில் பாரம் ஏற்றப்பட்டு சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதி வழியாக சத்தியமங்கலம் அருகே உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று தாளவாடி மலை பகுதியில் இருந்து கரும்பு பாரம் ஏற்றிய லாரி சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தமிழக கர்நாடக எல்லை பகுதியான காரப்பள்ளம் சோதனை சாவடி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை கரும்பு லாரியை வழிமறித்ததால் லாரி ஓட்டுநர் சாலையில் லாரியை நிறுத்தினார். இதைத்தொடர்ந்து லாரியின் அருகே வந்த காட்டு யானை தனது தும்பிக்கையால் லாரியில் இருந்த கரும்பு துண்டுகளை பறித்து சுவைத்தபடி வெகு நேரம் நின்று இருந்தது. இதன் காரணமாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்போது வரிசையில் நின்றிருந்த வாகன ஓட்டிகள் விநாயகா வழி விடு விநாயகா வழி விடு என காட்டு யானையை கும்பிட்டனர். இதைத் தொடர்ந்து காட்டு யானை சிறிது நேரம்  சென்றது. பின்னர் வாகனங்கள் புறப்பட்டு சென்றன….

The post கரும்பு லாரியை வழி மறித்து கரும்புகளை பறித்து தின்ற காட்டு யானை: சத்தியமங்கலம் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Sathyamangalam ,
× RELATED தமிழக- கர்நாடக மலைப்பாதையில் சாலையில்...