×

கமுதி பகுதியில் கோடை வெயிலால் வறண்ட ஊரணி: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

 

கமுதி, ஜூலை 28: கமுதி பகுதி ஊரணிகள் கோடை வெப்பத்தால் முற்றிலும் வறண்டு காணப்படுவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. கமுதி பேரூராட்சியில் செட்டி ஊரணி, வண்ணான் ஊரணி, கண்ணார்பட்டி ஊரணி, சுந்தரபுரம் ஊரணி, பெரிய தர்ஹா பகுதியில் உள்ள ஊரணி போன்ற ஊரணிகள் கமுதி பேரூராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. கடந்த வருடம் இப்பகுதியில் குறைந்த அளவு மழை பெய்ததால் மழை காலத்திலேயே இப்பகுதி ஊரணிகள் குறைவான தண்ணீருடன் காணப்பட்டன.

தற்போது நிலவிவரும் கடுமையான கோடை வெப்பத்தால், கடந்த 3 மாதங்களுக்கு முன்பே இந்த ஊரணிகள் முற்றிலும் வறண்டு காணப்பட்டது. இந்த ஊரணிகளுக்கு, இங்குள்ள பெரிய கண்மாயில் இருந்து தான் மழைநீர் வந்து நிரம்பு கின்றன. ஆனால் பெரிய கண்மாய் முற்றிலும் கருவேல மரங்களால் நிறைந்து, தூர்வாரப்படாமல் முற்றிலும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இங்கு மழைநீர் தேக்கி வைக்க முடியாமல் வீணாகி வருகின்றன.

மேலும், குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வரும் ஊரணிகளும் தூர்வாரப்படாமல் உள்ளதால், மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாமல் வீணாகி வருகிறது. தற்போது கமுதி பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது .கால்நடைகள் மற்றும் பறவைகளும் குடிநீர் இல்லாமல் சிரமப்படுகின்றன. எனவே ஊரணி பகுதியில் உள்ள கருவேல மரங்கள் தூர்வாரப்பட்டு, ஊரணிகள் ஆழப்படுத்தப்பட வேண்டுமென இப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகத் திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

The post கமுதி பகுதியில் கோடை வெயிலால் வறண்ட ஊரணி: குடிநீர் தட்டுப்பாடு அபாயம் appeared first on Dinakaran.

Tags : Kamudi ,
× RELATED தவெக கமுதி ஒன்றியம் சார்பில் விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்