×

கடைசி நிமிடம் வரை வாழப்பழகு

துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் துணிச்சலுடன் கூடிய தன்னம்பிக்கை வேண்டும். விழாமல் இருப்பதல்ல வெற்றி, விழும் போதெல்லாம் எழுவதுதான் வெற்றி. வீழ்ந்தே கிடப்பதுதான் தோல்வி. மரக்கிளையில் அமர்ந்துள்ள பறவை அந்தக் கிளையை நம்பி அமரவில்லை. தன்னுடைய சிறகுகளை நம்பித்தான் அமர்ந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பலத்த காற்று வீசும் பொழுது மரக்கிளை ஆடலாம், மரமே முறிந்து விழக்கூடும். அப்படியான ஆபத்துகள் நிகழ்ந்தாலும், தனது சிறகுகள் பலமாக இருக்கிறது என்பதை நம்பித்தான் அந்த பறவை மரக்கிளையில் அமர்ந்திருக்கிறது. அதுபோல தான் ஒருவருக்கு துன்பம் ஏற்படும்போது தன்னம்பிக்கை என்ற பலத்தை மனதில் ஏற்றிக்கொண்டால் மிகச்சிறந்த வெற்றியைப் பெறலாம். அத்தகைய வெற்றியை பெற்றவர்தான் சென்னையை சேர்ந்த ரோசி.பள்ளியில் படிக்கும் போது  படிப்பில் சிறந்த மாணவியாக விளங்கினார். பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளையும் பெற்றார். கல்லூரி படிப்பில் தான் விரும்பிய ஆங்கில இலக்கியத்தை தேர்ந்தெடுத்து படித்தார். கல்லூரிப் படிப்பை முடித்த ரோசி, கேரியர் கவுன்சிலிங் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதைத் தொடர்ந்து ஐடி நிறுவனம் ஒன்றில் பணியில் சேர்ந்தார். நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கவேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆனால் அவரது வீட்டில் இரவு நேரப்பணி என்பதால் பாதுகாப்பு கருதி அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் வீட்டில் உள்ளவர்களிடம் “நான் துணிச்சல் மிகுந்த பெண் நீங்கள் எதற்கும் பயப்பட தேவை இல்லை” என்று அவர்களை சமாதானப்படுத்தி அனுமதி பெற்று தனது பணியை தொடர்ந்தார்.ஐடி நிறுவனத்தில் பணியாற்றிய போது வேலைப்பளு அதிகமாக இருந்துள்ளது.வழக்கமான பணி நேரத்தைக்காட்டிலும் கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டியிருந்தது. அந்த சமயத்தில் ஒருநாள் திடீரென்று காலில் வலியை உணர்ந்திருக்கிறார் ரோசி. அவர் வழக்கமாக சேரில் உட்கார்ந்தாலும் காலை சம்மணம் போட்டுதான் அமருவார். ஆனால் அப்போது அந்த மாதிரி அமர முடியவில்லை. தாங்க முடியாத வலி ஏற்பட்டு உள்ளது. எந்நேரமும் வீட்டிற்கு வரும் போது கால் வலி உள்ளது என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இந்த நிலையில் பல மருத்துவர்களிடம் பார்த்தும் குணம் ஆக வில்லை. எதற்கும் வலி குறையவே இல்லை. வலி குறையாமல் அதிகரித்துக் கொண்டே இருந்ததால் மீண்டும் ரோசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவர்களின் தீவிர பரிசோதனைகளுக்கு பிறகு ரோசிக்கு ஏற்பட்டுள்ளது மிக அரிதாக லட்சத்தில் நான்கு பேருக்கு மட்டுமே வரக்கூடிய குல்லியன் பார்ரே (GBS) எனப்படும் கடுமையான நோய் என்பது தெரிய வந்தது. ரோசி படுத்த படுக்கையாக இருந்த அந்த நேரத்தில் அவருடைய குடும்பம் மிகவும் ஆதரவாக இருந்து பார்த்துக் கொண்டார்கள். அரிதான நோய் என்பதால் சிகிச்சைக்கான செலவுகளும் அதிகமாகவே இருந்தது. அதனால் அவரது குடும்பம் பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. வீட்டிலும், பணியிலும் சுதந்திரமாக வலம் வந்த அவருக்கு இந்த நோய் பெரும் அதிர்ச்சியாகவே அமைந்தது. தனது உடையை சரி செய்வதற்கு கூட, ஏன் சாதாரண சிறிய வேலைகளை செய்வதற்குக் கூட மற்றவர்கள் உதவியை நாட வேண்டியிருந்தது, அது அவருக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. இருந்தபோதும் இந்த நோயிலிருந்து எப்படியாவது விடுபட்டு மீண்டும் எழ வேண்டும் என்று மன உறுதியோடு விடாமுயற்சியை மேற்கொண்டார். மனம் தளர்ந்து சோர்வடைந்து வருத்தம் அடையும் போதெல்லாம் தனது மனதிடம் என் வாழ்க்கை இவ்வளவுதானா? நிச்சயம் நான் வாழ வேண்டும், வாழ்ந்தால் மட்டும் போதாது, ஜெயிக்க வேண்டும், ஜெயித்தால் மட்டும் போதாது, சாதிக்க வேண்டும் என்பதை ஆழ் மனதில் ஆழமாக பதியவைத்துக் கொண்டு மனஉறுதியுடன் செயல்பட்டார். அதனால் மருந்து மாத்திரைகளால் மட்டுமல்லாமல் தனது மன உறுதியாலும் இந்த நோயிலிருந்து மெல்ல மெல்ல கடந்து வந்தார். மனஉறுதியால் குணமடைந்த ரோசிக்கு திருமணமும் நடந்தது. முதல் குழந்தையை பெற்றெடுக்கும் போது, அவரது முன்பு இருந்த உடல்நிலை காரணமாக பிரசவம் ஆபத்தானது என்றே மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இருந்தபோதும் ரோசி அடுத்த சவாலையும் எதிர்கொண்டு நல்ல முறையில் குழந்தையைப் பெற்றெடுத்தார். கொரோனா ஊரடங்கு சமயத்தில் இரண்டாவது குழந்தையையும் பெற்றெடுத்தார்.உடல் ரீதியான பிரச்னைகளை தன்னம்பிக்கையால் மீண்டு வந்த ரோசி இமேஜ் கன்சல்ட்டிங்  என்ற ஆளுமையை மேம்படுத்தும் பயிற்சியின் மீது விருப்பம் ஏற்பட்டு அதற்கான படிப்பில் சேர்ந்து படித்து திறன்களை வளர்த்துக் கொண்டார். அதன் பிறகு தன்னை ஒரு தொழில் முனைவோராக மாற்றிக்கொண்டு ரேடிக்கல் இமேஜ் கன்சல்டிங் என்ற ஆளுமை மேம்பாட்டு நிறுவனத்தை  தொடங்கினார். தன்னுடைய நிறுவனம் மூலமாக பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று தான் கடினமான சூழலிலிருந்து மீண்டு வந்த கதையைப் பகிர்ந்துகொண்டார். இது பலருக்கு உத்வேகம் அளித்தது. தனிநபர்களின் திறன்களை மேம்படுத்தி தனிப்பட்ட வாழ்க்கையிலும், பணி வாழ்க்கையிலும் சிறப்பாக செயல்பட்டு வாழ்வில் வெற்றி பெற ரோசி தன் நிறுவனத்தின் மூலமாக பயிற்சி அளித்து வருகிறார்.தொழில் முனைவராக வேண்டும் என்று துடித்துக்கொண்டிருக்கக்கூடிய பெண்களுக்கு ரோசி சொல்வது என்னவென்றால்  முதலில் நீங்கள் ஒரு இலக்கை தீர்மானித்துக் கொள்ளுங்கள். இலக்கில் வெற்றி பெற சுய ஒழுக்கத்தை கடைபிடியுங்கள், அதிகாலையில் எழுந்து திட்டமிட்டு பணிகளை செய்யத் தொடங்குங்கள். உடனே வெற்றியை எதிர்பார்க்காதீர்கள். ஒரு நிறுவனம் வெற்றி பெற குறிப்பிட்ட ஆண்டுகள் ஆகும்.எனவே எப்போதும் உற்சாகமாக,ஊக்கமாக செயல்படுங்கள். எல்லாவற்றிற்கும் மேலாக தன்னம்பிக்கையுடன் செயல்படுங்கள் என்கிறார் ரோசி.இளைஞர்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சியாளராகவும், மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளராகவும் செயல்பட்டு கொண்டு இருக்கும் ரோசியின் வாழ்க்கை நமக்கு உணர்த்தும் பாடம் என்னவென்றால் துன்பங்களைக் கண்டு துவண்டு விடாமல் அதனை தன்னம்பிக்கையுடன்  எதிர்கொண்டு மீண்டும் மீண்டும் எழுந்து ஊக்கமுடன் செயல்பட வேண்டும். நம்முடைய வாழ்க்கை மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், பயனுள்ள வகையிலும் வாழ வேண்டும் என்பதுதான்.ரோஸிக்கு ஏற்பட்ட இந்த சோதனையை யார் சந்தித்திருந்தாலும் நான்கு சுவர்தான் தனது உலகம் என்று மூலையில் முடங்கி போய் இருப்பார்கள். ஆனால் ரோசி அப்படி இருக்க விரும்பவில்லை. தனக்கு ஏற்பட்ட நோயை வென்று புதிய வாழ்க்கை பாதையை உருவாக்கினார். அதில் புன்னகையுடன் பயணம் செய்து தன்னால் பலரும் பயன்பெறும் வகையில் வாழ்ந்து காட்டி ஜெயித்து கொண்டு இருக்கின்றார். இவரைப்போல மனஉறுதியை மனதில் பதியச் செய்து கடைசி நிமிடம் வரை வாழப்பழகுங்கள்,  வெற்றியை நோக்கி புறப்படுங்கள்.!– பேராசிரியர், அ. முகமதுஅப்துல்காதர்.

The post கடைசி நிமிடம் வரை வாழப்பழகு appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED தயாரிப்பு முறையில் பல்வேறு...