×

கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானத்தை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவு

 

மாமல்லபுரம், ஜூலை 31: தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேற்று சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பில் கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் அமைக்கப்பட்டுவரும் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார். நெம்மேலியில் ரூ.1,516 கோடியே 82 லட்சம் மதிப்பீட்டில் நாள்ளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவுறும் தருவாயில் உள்ளது.

கடல்சார் பணிகள், இயந்திரவியல் மற்றும் மின்சார கருவிகள் நிறுவும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், கடல்நீரை நிலையத்துக்கு உள்ளே கொண்டு வரும் குழாய் மற்றும் நிராகரிக்கப்பட்ட உவர்நீரை கடலுக்குள் வெளியேற்றும் குழாய், கடல்நீரை உள் வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் கசடுகளை அகற்றும் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல் நீர்த்தேக்கத் தொட்டி, வடிகட்டப்பட்ட கடல்நீர் உந்து நிலையம் ஆகிய ஆய்வு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் நிலையம், சுத்திகரிக்கப்பட்ட நீர்த்தேக்கத் தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம், நிர்வாக மற்றும் காப்பாளர் கட்டிடம், கசடுகளை கெட்டிப்படுத்தும் பிரிவு, செதிலடுக்கு வடிகட்டி, பிரதான மின் நிலையம், புவியியல் தகவல் முறைமை, நுண் வடிகட்டி மற்றும் எதிர்மறை சவ்வூடு பரவல் உந்து நிலையம், சுண்ணாம்பு செறிவூட்டும் நிலையம் போன்ற கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தார்.

மேலும், கடல்சார் பணிகளின் ஒரு பகுதியாக, 2,250 மிமீ விட்டமுள்ள 1,035 மீட்டர் நீளமுள்ள கடல்நீரை உட்கொள்ளும் குழாயில், 835 மீட்டர் நீளத்துக்கு குழாயை கடலில் பதிக்கும் பணி நிறைவடைந்துள்ளது, மேலும் மீதமுள்ள 200 மீட்டர் நீளத்துக்கு கடல்நீரை உட்கொள்ளும் குழாய் பதிக்கும் பணிகளுக்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவே இந்தியாவின் மிகப்பெரிய கடல்நீரை உட்கொள்ளும் குழாய். மேலும் நிராகரிக்கப்பட்ட உவர்நீர் வெளியேற்றும் 1,600 மிமீ விட்டமுள்ள 636 மீட்டர் நீளமுள்ள குழாயில் 600 மீட்டர் நீளத்துக்கு குழாய் கடலுக்கடியில் பதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையத்திலிருந்து பெறப்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பொருட்டு, 48.10 கி.மீ நீளத்துக்கு குழாய் பதிக்கும் பணிகள் மற்றும் சோழிங்கநல்லூரில் இடைநிலை நீரேற்று நிலையம் அமைப்பதற்கான அனைத்து கட்டுமானப் பணிகளும் முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையத்திலிருந்து பெறப்படும் குடிநீர், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், புனித்தோமையார் மலை, மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், கீழ்கட்டளை, மூவரசன்பேட்டை, சோழிங்கநல்லூர், உள்ளகரம்-புழுதிவாக்கம், மடிப்பாக்கம். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பல்லாவரம் மற்றும் பழைய மகாபலிபுரம் சாலையில்(ஓஎம்ஆர்) அமைந்துள்ள தகவல் தொழில் நுட்ப பகுதிகளில் 9 லட்சம் மக்கள் பயனடைவர்.

மேலும் இந்நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் அனைத்து பணிகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது, சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய மேலாண்மை இயக்குநர் கிர்லோஷ் குமார், கலெக்டர்ராகுல் நாத், செங்கல்பட்டு, சென்னை குடிநீர் வாரிய தலைமைப் பொறியாளர் கந்தசாமி, கண்காணிப்புப் பொறியாளர் ஜி.பி.வைதேகி, செயற்பொறியாளர் எஸ்.கிருபாகரவேல் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலைய கட்டுமானத்தை விரைந்து முடிக்க வேண்டும்: தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Sivdas Meena ,Mamallapuram ,Chief Secretary of ,Tamil Nadu Government ,Chennai Metropolitan ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி விவகாரம்: ஆட்சியர்கள்,...