×

எப்போதும் துணை தொழுந்தெய்வமே

அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் - 34

ஏத்தும் அடியவர் ஈரேழு உலகினையும் படைத்தும்
காத்தும் அழித்தும் திரிபவராம் கமழ் பூங்கடம்பு
சாத்தும் குழல் அணங்கே மணம் நாறும் நின்தாளிணைக் கென்நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடைத்தே.
(பாடல் எண் - 26)

வேலை வாய்ப்புக்காக குறைவாக படித்த ஒருவன் நேர்காணல் தேர்விற்கு காத்திருக்கும்போது அவனுக்கு பாடம் புகட்டிய வாத்தியார்களெல்லாம் அதே வேலைக்காக அவன் முன்வரிசையில் நிற்பதை எண்ணித்தான் இந்த நேர்காணலில் வெற்றி பெறுவோமா என்று ஏங்குகின்ற மனநிலையில் முன்நிற்பவர் திறமையை எண்ணி தன் முயற்சியை விட்டு விடலாமா என தனக்குள் முடிவெடுக்கும் மனநிலையில் ஒருவர் இருக்கிறார். இது இன்றைய சூழல்.

இதேபோல்தான் அன்று. உமையம்மையைப் புகழ்ந்து பாடி அவள் அருளைப் பெறுவதற்கு இப்பரந்த உலகத்தை படைத்தும் காத்தும், அழிக்கும் செயல்களை முயற்சியின்றி விளையாட்டாய் செய்யும் பேராற்றல் மிக்க ஐயன், மால், ருத்திரன் முதலாய தேவர்கள் இருக்க அதே வரிசையில் அபிராமி பட்டர் அவள் அருளைப் பெற நிற்கிறார். அம்முயற்சி எந்த அளவிற்கு நகைப்பிற்கு இடமானது என்று தனக்குள் எண்ணி தன் சிறுமை கருதியும் உமையம்மையை ஏற்றும் அடியவர்களின் பெருமை கருதியும் இருவருக்கும் இடையில் உள்ள தூரம் கருதியும் ஒரு பக்தனின் மனநிலையை எடுத்து விளக்கிக் கூறுகிறார் இப்பாடலில். ஒவ்வொரு சாமானிய பக்தருக்கும்கூட இறைவியானவள் இறங்கி வந்து அருள் செய்வாள் என்று அவளின் கருணையின் சிறப்பை மறைமுகமாக இப்பாடல் விளக்குகிறது. ஒரு தாய் தன் குழந்தையின் மழலையை கவிதை என்று எண்ணி வியப்பதுபோல, இனிப் பாடலுள் நுழைவோம்.

ஏத்தும் அடியவர்: ஏத்துதல் என்பது விரும்பியதை அடையும் பொருட்டு அதை அளிப்பவரிடத்து  பெறுவதற்காக ஒருவரால் செய்யப்படும் முயற்சியைக் குறிக்கும். இதை, வடமொழியில் ‘அர்ஹதி’ என்ற வினைச் சொல்லால் குறிப்பிடுவர். இறைவனிடத்திலிருந்து அவன் அருளைப் பெறுவதன் பொருட்டு பக்தர்களால் செய்யப்படும் முயற்சி அல்லது வழிபாடு ஏத்துதல் எனப்படும். இதை ஆகமங்கள் ஒன்பது வகையாக குறிப்பிடுகின்றது.

1. இறைவனுக்காக ஆகமங்கள் சொன்னபடி இறை திருஉருவத்தினை நிறுவி அவற்றை குறித்து செய்யப்படுகின்ற அனைத்து செயல்களுமாகும். (பூஜை)
உறைகின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே
(பாடல் எண் - 19)
2. இறைவனை குறித்து புகழ்ந்து பாடுவதாகும். சொந்தமாக பாடல் இயற்றி பாடுவது, (ஸ்துதி)
 துதியே ஆன சுந்தரவல்லி (பாடல் எண் - 17)
3. பிறர் இயற்றிய பக்தி நூல்களை, அல்லது வேதம் இவற்றை முறையாகப் பாடுவது (தோத்திரம்)
தோத்திரம் செய்து(பாடல் எண் - 67)
4. நேரடியாக வழிபாடு செய்யாமல் உதவுவது (தாஸ்யம்)  பின்னே திரிந்து உன் அடியாரைப் பேணி
(பாடல் எண் - 25)
5. வேள்வி முதலானதைத்தான் செய்வது, பிறரைக் கொண்டு செய்விப்பது (யக்ஞம்)  உயிர் அவி உண்ணும் உயர் சண்டி (பாடல் எண் - 77)
6. யோகம் முதலியவற்றை தான் செய்வது (அப்யாசம்) கண் மூன்றும் கருத்தில் வைத்து (பாடல் எண் - 53)
7. இறைவனின் திருநாமத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டேயிருப்பது. (ஜபம்)  ‘மன்னியது உன் திருமந்திரம்’ (பாடல் எண் - 6)
8. இறையருள் நூல்களை பொருளுடன் கற்றல், கற்பித்தல். (சாஸ்திர விசாரம்) ‘வேதம் சொன்ன வழிக்கே வழிபட’ (பாடல் எண் - 79)
9. செயல் அறுத்தல் (சன்யாசம்) ‘கரும நெஞ்சால்’
(பாடல் எண் - 3) பாழ் நரகக் குழிக்கே (பாடல் எண் - 79)

இந்த ஒன்பதுமே வழிபாடாகவே கருதப்படுகிறது. வழிபாடு எனினும், ஏத்துதல் எனினும் சமமேயாம். ஏத்தும் அடியவர் - என்று சொல்லியதன் மூலம்  அடியவர்களாக ஆதித்தன், அம்புலி, அங்கி, குபேரன், அமரர்தங்கோன், போதிற்பிரமன், புராரி, முராரி பொதிய முனி காதிப் பொருபடைக் கந்தன், கணபதி, காமன்-97  ஏத்தும் அடியவர் ஈரேழ் உலகினையும் படைத்தும், காத்தும், அழிப்பவராம் (பிரம்மா, விஷ்ணு, ருத்ரன்) மனிதரும், (குங்குலியக் கலய நாயனார்) தேவரும் (அஸ்வினி தேவர்கள் மாயா முனிவர் (மார்க்கண்டேயர்) இவர்கள் அனைவரையும் ஏத்தும் அடியவர் என்கிறார்.

ஈரேழ் உலகினையும்: உலகம் பதினான்கு இருப்பதாகவும் அவற்றில் வசிக்கின்ற தேவதைகளின் பெயர், அந்த உலகங்களின் பெயர், இவையெல்லாம் சாக்த தந்திரங்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலோகங்களாவன - பூலோகம், புவர் லோகம்,  சுவர் லோகம், மகர் லோகம், ஜனோலோகம், தபோ லோகம், சத்ய லோகம். கீழ்லோகங்களாவன - அதலம், விதலம், சுதல, ரசாதல, தலாதல, மகாதல, பாதாளம். இந்த உலகங்கள் ஈரேழு உலகங்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. இவற்றில் வாழும் உயிரினங்களின் பண்பு போன்றவைகளும் குறிப்பிடப்படுகின்ற சாக்த தந்திரங்களின்படி உலகம், உயிர் இவை இரண்டும் ஒன்றாகவே கருதப்படுகின்றது. ஒரே பொருளே இருக்கிறது.

அந்த ஒன்றே வேறுபாடுள்ள, எண்ணற்ற தன்மைகளைப் பெற்று தனக்குள்ளே முழுவதும் விரோதமான மாறுபாடுடைய தன்மையை பெற்றிருந்தாலும், அது ஒன்றே என்று சாதிப்பதே சாக்த தந்திரங்கள். அந்த வகையில் இந்த பதினான்கு உலகங்களும் பல்வேறு விதமான இயல்புகளை பெற்றிருந்தாலும் அவை தோன்றி, நிலைப்பட்டு, மறையும் தன்மையில் ஒரு சிறிதும் மாற்றமில்லை. மாற்றம் ஒன்றே மாறாததாக இருக்கிறது. அந்த தன்மையையே மாயை என்ற வார்த்தையால் சாக்த தந்திரம் குறிப்பிடுகின்றது. இது ஒரே பராசக்தியின் வடிவமேயாகும். ஒரே நிலவானது நீர் நிலைகளில் பிரதிபலிக்கும்போது பல நிலவாய் தோன்றுகின்றது. இது மாயை உண்மையல்ல. இதையே

‘‘ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்து
இவ்உலககெங்குமாய் நின்றாய்’’


(பாடல் எண் - 56) என்று குறிப்பிடுவதிலிருந்து பதினான்கு உலகத்திலும் உமையம்மையே  இருக்கிறாள். இந்த உலகத்திலிருக்கிற பொருளாகவும் அவளாகவே இருக்கிறாள். அந்த உலகத்தை பிறரைக் கொண்டு படைப்பவளாகவும், படைப்பதற்கு உதவும் ஆற்றலாகவும் அவளேயிருக்கிறாள். இதையே தான் நவராத்திரி ஏழு படியில் ஆரம்பித்து அதில் வைக்கப்பட்டிருக்கிற அனைத்து இறை திருஉருவத்திலும் (கொலுபொம்மைகள்) அவள்தான் என்பதை குறிப்பிடும் வகையில் அமைந்துள்ளது. இந்த உலக வடிவில் இருக்கும் உமையம்மையைத்தான் ‘ஈரேழ் உலகினையும்’ என்று ‘உம்’ மையாலே குறிப்பிடுகிறார்.

படைத்தும்: என்ற வார்த்தையால் படைக்கின்ற செயலையும் அதைச்செய்யும் தேவதையையும் சூட்டினார். படைத்தல் என்பது ஆகமங்களை பொறுத்தவரை ஐந்து வகையாகக் கூறப்படுகிறது.

1. பிரம்ம சிருஷ்டி, 2. ஸ்வசிருஷ்டி, 3. தர்மசிருஷ்டி, 4. காரணசிருஷ்டி, 5. சிவசிருஷ்டி என்பதாகும். இந்த ஐந்து பேரையுமே படைத்தல் என்ற வார்த்தையால் குறிப்பிட்டார். பிரம்ம சிருஷ்டி: இது உயிர்களுக்கு பிரம்மாவினால் செய்யப்படும் உடலின் படைப்பாகும். உடல் என்பது மரம், நத்தை, பாம்பு, பறவை, விலங்கு, மனிதன் போன்ற ஆன்மாக்களுக்கு உடலை படைப்பதை குறிக்கும். இதற்கு பிரம்மா என்பவர் அதிதேவதையாவார்.

படைத்தும் காத்தும் அழித்தும் திரிபவராம்
(பாடல் எண் - 26)

ஸ்வ சிருஷ்டி: இது பிரம்மாவினால் படைக்கப்பட்ட மனிதன் தன் அறிவினால் தானே உருவாக்கிய வாழ்க்கை நலன்களுக்குரிய விஞ்ஞான சாதனங்கள் முதலானவையாகும். உதாரணமாய் கைபேசி, தொலைக்காட்சி போன்றவை. தோத்திரம் செய்து-67 தர்ம சிருஷ்டி: இது யாருடைய படிப்பிலும் படைக்கப்பட்ட பொருளின் இயல்பு சார்ந்து தோன்றும் நல்ல மற்றும் தீய விளைவாகும். மனிதன் போக்குவரத்து சாதனத்தை படைத்தான். அதன் தவறு விபத்தை உருவாக்குகிறது.

 ‘‘உடைத்தனை வஞ்சப் பிறவியை உள்ளம் உருகும் அன்பு படைத்தனை’’
(பாடல் எண் - 27)

காரண சிருஷ்டி: எந்த ஒரு படைப்பிற்கும் காரணம் வேண்டும். காரணம் இல்லாமல் காரியமில்லை. காரியம் இல்லாமல் படைப்புகளில்லை. உதாரணமாய் அதுபோல் ஒரு மண்பானையை படைப்பதற்கு குயவனின் தேவையே காரணமாகிறது. மண்பானையை படைப்பதற்குத்தேவையானவை மண் சுழல்வட்டு, தண்ணீர், அதைச்செய்யும் குயவன் இவைகள் இல்லாமல் ஒரு மண்பானை உருவாகாது, இவைகள்  முதல் காரணமாக இருந்தாலும் குயவனின் தேவையை நிறைவேற்றிக் கொள்ளவே அவனுக்குத் தெரிந்த தொழிலின் வழி பானையைச் செய்கிறான். இந்த செயலுக்கு மூலகாரணமாகயிருப்பது குயவனின் தேவையே இதையே காரண சிருஷ்டி என்கிறோம்.

‘பூத்தவளே புவனம் பதினான்கையும்’
(பாடல் எண் - 13)

உலக படைப்பிற்கு சிவ சிருஷ்டி: - இது மேற்கண்ட நான்கும் ஒன்றைவிட ஒன்று உயர்ந்தும், ஒன்றிற்கு ஒன்று அடிப்படையானதுமாகும். ஆனால் சிவ சிருஷ்டி என்பது இவை எல்லாவற்றிற்கும் மேலானது. எதனோடும் தொடர்பற்றது, சுதந்திரமானது, காரண காரியங்களோடு அப்பாற்பட்டது. ஒரு உதாரணத்தால் இதை விளங்க வைக்கலாம்.ஒரே வயதுடைய இரு குழந்தைகள் நீராடச் சென்றனர். அதில் ஒரு குழந்தையை நீர் நிலையில் உள்ள முதலையானது தின்றுவிட்டது. அதனுடன் உடன் சென்ற குழந்தைக்கு ஏழு வருடம் கழித்து பூணூல் சிறப்பு சடங்கு நடந்தது. அவ்வமயம் அக்குழந்தையை பெற்றவர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். முதலை உண்ட பாலகனின் தாய்-தந்தையர்கள் அவன் இறந்த சம்பவத்தை நினைத்து அழுது அங்கு தரிசிக்க வந்த சுந்தரரிடம் புலம்பினார்கள்.

இறந்துபோய்  ஏழு வருடம் ஆகியதால் முதலையும் இறந்து அந்த குட்டையில் நீரும் வற்றிவிட்ட நிலையில் சிவனருளால் குட்டையில் நீர் வந்து, குழந்தையை உண்ட அந்த முதலை தோன்றி அந்த முதலையின் வாயிலிருந்து உண்ணப்பட்ட இறந்த அச்சிறுவன் ஏழாண்டு வளர்ச்சியுடன் மீண்டும் அக்குழந்தையை தோற்றுவித்தார். இந்த சம்பவம் உண்மையாக நடந்தது. சிவனருளால் நடந்தது. இதையே சிவசிருஷ்டி என்பர். இது இயற்கைக்கு முரணானதும், காரண காரியங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதும், உலகியல் நடைமுறையில் எப்பொழுதுமில்லாததும், ஆனால், அவினாசியில் நடந்ததுமாகிய சிவ சிருஷ்டியாகும். இந்த ஐந்து சிருஷ்டியையும், அபிராமி பட்டர் குறிப்பிடுவதிலிருந்து அறியலாம்.

‘மாயா முனிவரும்’ (பாடல் எண் - 4) சிவசிருஷ்டிக்கு உமையம்மை காரணம், மார்கண்டேயரின் என்றும் பதினாறு ஆகி இருப்பது இறவாமல் இருப்பது. இந்த ஐந்தையுமே ‘படைத்தும்’ என்ற வார்த்தையால் குறிப்பிட்டார்.‘காத்தும்’:

காத்தல் என்பது பத்து வகையாம். தன்னின்று தன்னை காத்தல். முன்நின்று காத்தல் படர்க்கையிலிருந்து காத்தல், இவை ஒவ்வொன்றும் மூன்று வகைப்படும். இவைகளை உதாரணத்தினால் மிக எளிமையாக புரிந்துகொள்ள முடியும்.

தன்னைத்தான் காத்தல். உணவு உட்கொள்ளுதல்-தன்னைத்தான் காத்தல். ‘உன்னினும் வேண்டுவது’
(பாடல் எண் - 55)

பொருளீட்டி தன்னைத்தான் காத்துக் கொள்வதற்கேயாம். தனம் தரும் கல்வி தரும் - தன்னறிவினால் தான் காத்துக் கொள்ளலாகும்.
கலையாத கல்வியும் (அம்மை பதிகம்)

முன்னிலை காத்தலானது- தாய், தந்தை, குரு இவர்கள் முன்னிலையிலிருந்து நம்மை காப்பவர்களாவார்கள்.
தாய்-உன்னையே அன்னையே என்பவன் ஓடிவந்தே
(பாடல் எண் - 33)

தந்தை - எந்தை தன் கண்ணன்
(பாடல் எண் - 9)

குரு - தலைமேல் வலிய வைத்து
(பாடல் எண் - 32)

படர்க்கையிலிருந்து காத்தலாவது
(மருத்துவர்)

போர் வீரர், நமக்கு துன்பம் வரும்போது
உறவினரல்லாது நம் உடனின்று காப்பவர் அனைவரையுமே குறிக்கும். மருத்துவர் - அபிராமி என்னும் அருமருந்தே (பாடல் எண் - 25)

போர் வீரர் - காதிப் பொருபடைக் கந்தன்
(பாடல் எண் - 93)

நமக்கு துன்பம் வரும்போது உறவினரல்லாது நம் உடன் நின்று காப்பவர் அனைவரையுமே குறிக்கும்.
துணையும் தொழுந் தெய்வமும் (பாடல் எண் - 2)

பத்தாவதாக-காப்பவள் உமையம்மையே. இந்த காத்தல் தன்மையானது யாவராலும் வேண்டப்படாமலேயே உமையம்மையின் கருணையால் தோன்றும் காத்தல் செயலாகும். இதை உமையம்மையானவள் செயலாகச் செய்வதில்லை. இயல்பாக வெளிப்படுவது. உதாரணம் தீயிற்கு சுடுகின்ற தன்மையுடன் கண்ணுக்கு புலப்படுகின்ற தன்மையான ஒளி இயல்பாக ஒளிந்திருப்பதுபோல் உமையம்மையினிடத்தில் காத்தல் என்கின்ற இந்த அருட் சக்தி ஒளிந்திருக்கிறது. ஆனால் வீணையிலிருந்து மீட்டுதல் என்ற செயலன்றி இன்னிசை வெளிப்படாது. அது ஒரு செயல் அல்ல. ஆனால் தீயினிடத்து ஒளி செயலல்ல.

வீணையினிடத்து ஒலி செயல் என்பதைப்போல் என உணர்க. ‘அழித்தல்’: - என்பது மூன்று வகையாகும். காலநாசம், அக்னிநாசம், ருத்ர நாசம். காலநாசம் - என்பது காலத்தினால் ஏற்படும் அழிவைக் குறிக்கும். இலையுதிர் காலத்தில் தாவரம் அழிவதுபோல் நூறு வயதானால் முதுமையில் அழிவதுபோல் ஒரு பொருளுக்கு அழிவு காலத்தை காரணமாகக் கொண்டு அமைதலை குறிக்கும்.

அக்னிநாசம் - நெருப்பானது தன்னைச்சாரும் பொருள்களை எப்படி அழிக்குமோ அதுபோல் நெருப்பானது அழித்தலாகிற செயலைச் செய்கிறது, அழித்தல் என்கின்ற செயல் சார்ந்து அமைவதையே அக்னி நாசம் எனப்படுகிறது. ருத்ர நாசம் - ஒரு குழந்தையானது பால பருவத்தை அடையும்போது குழந்தைத் தன்மை அழிந்து விடுகிறது. இளமைப் பருவம் வரும்போது பாலபருவம் அழிக்கப்படுகிறது. இதுபோல் ஒரு பகுதி அழியாமல் ஒரு பகுதி முழுவதுமாய் அழிக்கப்படுகிறது. இதையே ருத்ர நாசம் என்பர்.

‘அழித்தல்’ என்ற சொல்லானது சாக்த சித்தாந்தத்தைப் பொறுத்தவரை அறிவற்ற ஜடமாகிற பொருளையே ‘அழித்தல்’ என்ற வார்த்தை குறிப்பிடுகின்றது. உதாரணமாய் ஒரு திடப்பொருளாகிற விறகை தீக்கொண்டு அழித்தால் அது வாயுவாக மாறி நிற்குமேயன்றி அழியாது.

வ்யக்தம் - அவ்யக்தம்
வ்யக்தம் - என்பது விறகாகத் தோன்றும் நிலை
அவ்யக்தம் - என்பது விறகு வாயுவாக

இருக்கும் நிலை இந்த வ்யக்த நிலையிலிருந்து அவ்யக்த நிலைக்கு மாற்றும் செயலுக்கு அழித்தல் என்று பொருள். வ்யக்தம் என்பது புலன்களுக்கு புலப்படுவது. அவ்யக்தம் என்பது புலன்களைக்கொண்டு அறிய முடியாதது என்கிறது சாக்தம். இத்தகைய அழிவு அக்னியினால் மட்டுமே நிகழும். இடம், பொருள், செயல் (நிகழ்வு) இவைகளின் அடிப்படையில் ஒரு பொருளில் தோன்றும் நாசத்தை காலநாசம் என்பர். இடம் என்பது மையத்தை அடிப்படையாகக் கொண்டு பத்தாக அமைவது, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு, வடகிழக்கு, வடமேற்கு, மேல், கீழ், எட்டுதிக்கே-37, வானந்தமான வடிவு-11 பொருள் - என்பது திட, திரவ, வாயு இது போன்றவை.

செயல் - அக இயக்கம், புற இயக்கம் என இரு வகையான நிலை மாற்றமாகும். அக இயக்கம் என்பது ஒரு நீர்நிலையில் தண்ணீர் அசைவற்று இருப்பது (குளத்தில்) புற இயக்கம் என்பது ஆற்றுத்தண்ணீர் போல இந்த மூன்றும் ஒன்றாக சேர்வதற்கு காலம் என்று பெயர். இந்த திசையிலுள்ள (தி, திரவ, வாயுபாரிஷ) பொருள். இவ்வாறு இயங்கியது என்பதன் தொடர்ச்சியே காலம். இந்த மூன்றையும் சாக்தர்கள் காளி என்ற வார்த்தையால் கூறுகிறார்கள்.

பா.இராஜசேகர சிவாச்சாரியார்

Tags : subsidiary ,
× RELATED விடுதி கண்காணிப்பாளர், உடற்பயிற்சி...