×

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பட்டியல் பிரிவினருக்கான 30,000 பணியிடம் நிரப்பவில்லை: முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சென்னை: கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட 30 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பவில்லை, இதனை உடனடியாக நிரப்ப முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணியாளர் சங்கத்தினர் கூறியுள்ளனர். இதுகுறித்து, தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை டாக்டர் அம்பேத்கர் எஸ்.சி, எஸ்.டி. பணியாளர்கள் நலச்சங்கம் மாநில பொது செயலாளர் டி.மகிமை தாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வழியே செயல்படுத்தப்படும் திட்டங்கள், அடுத்த 10 ஆண்டுகளுக்கான துறையின் தொலைநோக்கு திட்டங்கள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தலைமை செயலகத்தில் நடத்திய ஆய்வு கூட்டத்தை இச்சங்கம் பெரிதும் பாராட்டுகிறது. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கென ஒதுக்கப்பட்ட சுமார் 30 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்தன. அதிமுக ஆட்சி ஆதிதிராவிட மக்களுக்கு செய்த அநீதியை களைந்திட பல்வேறு அரசு துறைகளில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு காலி பணியிடங்களை கண்டறிந்து விரைந்து நிரப்பிட வேண்டும். பட்டியலின மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை, உயர்கல்வி சிறப்பு உதவித் தொகை, முனைவர் பட்டப் படிப்பிற்கான ஊக்கத் தொகைளை எவ்வித தொய்வும் இன்றி உரிய காலத்தில் வழங்கிட வேண்டும்.  வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் பெறப்பட்டு நிலுவையில் உள்ள பயனாளிகளுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டாக்கள் வழங்கிட வேண்டும். வன்கொடுமை தடுப்பு சட்டம் உரிய முறையில் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதை இச்சங்கம் நெஞ்சார பாராட்டுகிறது. மேலும் மாநில எஸ்.சி. ஆணையத்தை தமிழகத்தில் அமைத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது….

The post கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பட்டியல் பிரிவினருக்கான 30,000 பணியிடம் நிரப்பவில்லை: முதல்வர் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Chennai ,
× RELATED துணை முதலமைச்சர், புதிய அமைச்சர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்து