×

ஆதார் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள 1,435 தபால் நிலையங்களில் ஆதார் மையங்கள்

சென்னை: தமிழகம் முழுவதும் ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை மேற்கொள்ள 1,435 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையங்கள் செயல்பட்டு வருகிறது. தனிநபர் ஒவ்வொருவரும் ஆதார் அட்டையை கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, பல்வேறு அரசு அலுவலகங்களில் ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்பட்டது. இதேபோல், இந்தியா முழுவதும் உள்ள தபால் நிலையங்களிலும் ஆதார் சேவை மையங்கள் அமைக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் உள்ள அண்ணாசாலை தலைமை தபால் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 3ம் தேதி புதியதாக ஆதார் திருத்த மையம் தொடங்கப்பட்டது. பின்னர், நவம்பர் 23ம் தேதி ஆதார் சேவை பதிவு புதியதாக கொண்டுவரப்பட்டது. இதனால், ஆதார் சேவையை புதியதாக பதிவு செய்பவர்களுக்கும், திருத்தங்களை மேற்கொள்வதும் பொதுமக்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. இதேபோல், சென்னையை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் வரையில் 70 தபால் நிலையங்களில் ஆதார் சேவை மையங்கள் தொடங்கப்பட்டது.

சென்னை மட்டுமல்லாது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த சேவையை விரிவு படுத்த திட்டமிடப்பட்டு மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தபால் நிலையங்களில் சேவை விரிவுபடுத்தப்பட்டது. இதற்காக இந்த தபால் நிலையங்களுக்கு ஆதார் பதிவு மையங்களுக்கு தேவைப்படும் பொருட்களும் வழங்கப்பட்டது. மேலும், கடந்த மார்ச் மாதம் வரையில் தமிழகம் முழுவதும் 1,435 ஆதார் சேவை பதிவு மற்றும் திருத்த மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த தபால் நிலையங்களில் கடந்த மாதம் 30ம் தேதி வரையில் 10 ஆயிரம் பேர் புதியதாக ஆதாரை பதிவு செய்துள்ளனர். 80 ஆயிரம் பேர் ஆதாரில் திருத்தத்தை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஆதார் சேவையை வழங்குவதில் சிறப்பாக செயல்பட்ட தபால் நிலையங்களுக்கு கடந்த 11ம் தேதி டெல்லியில் விருதுகளும் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாட்டில் தி.நகர் தலைமை தபால் நிலையம், கோவை மேற்கு பகுதியில் உள்ள சூரமங்கலம் தலைமை தபால் நிலையம், மதுரை தெற்கு பகுதி தலைமை தபால் நிலையம், திருச்சி மத்திய பகுதி தலைமை தபால் நிலையம் ஆகிய தபால் நிலையங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED கனமழை காரணமாக சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.13.35 கோடி ஒதுக்கீடு