×

ஒன்றியஅரசின் தவணை தொகை பெற விவசாயிகளின் வீடுகளிலேயே வங்கி கணக்கு தொடக்கம்: அஞ்சலக அதிகாரி தகவல்

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளின் வீட்டிற்கே சென்று அஞ்சலகங்கள் மூலம், இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி கணக்கு தொடங்கி வருவதாக அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் அமுதா தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்ட அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் ரா.அமுதா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளின் நலன் கருதி பிரதமரின் கிசான் திட்டத்தில் 4 மாதங்களுக்கு ஒருமுறை அவர்களது வங்கிக் கணக்குக்கு ரூ.2 ஆயிரம் வீதம் 3 தவணையாக மொத்தம் ரூ.6 ஆயிரம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதி விவசாயிகளின் வங்கிக் கணக்குக்கு நேரடியாக செலுத்தப்படுகிறது.

நிதியை பெற விவசாயிகள் ஆதார் எண் இணைப்புடன் வங்கிக் கணக்கு அவசியமாகிறது. இதுவரை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 7 ஆயிரம் விவசாயிகள் வங்கிக் கணக்கு இல்லாமல் உள்ளனர். இந்த இரு மாவட்டங்களிலும் உள்ள விவசாயிகள் ஒன்றிய அரசு அனுப்பி வரும் தவணைத் தொகையை பெற ஏதுவாக மாவட்டங்களில் உள்ள அந்தந்த பகுதி அஞ்சலகங்கள் மூலம் விவசாயிகளின் இல்லத்துக்கே சென்று வங்கிக் கணக்கை தொடங்கும் சிறப்பு முகாமை நடத்தி வருகிறோம். பிரதமரின் கிசான் திட்டத்தில் விவசாயிகள் விவரம் பதிவேற்றம் செய்யவும், அஞ்சலக பொது சேவை மையம் மூலமாக உதவிகள் செய்து தரப்படும்.

கிராம அஞ்சல் ஊழியர்களுக்கும், தபால்காரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் போன், பயோ மெட்ரிக் சாதனத்தின் மூலம் விவசாயிகள் தங்கள் ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணை மட்டும் பயன்படுத்தி ஒருசில நிமிடங்களில் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கி கணக்கை தொடங்க முடியும். இந்த அரிய வாய்ப்பை விவசாயிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சலகங்கள், தபால்காரர்கள், கிராமிய அஞ்சல் ஊழியர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post ஒன்றியஅரசின் தவணை தொகை பெற விவசாயிகளின் வீடுகளிலேயே வங்கி கணக்கு தொடக்கம்: அஞ்சலக அதிகாரி தகவல் appeared first on Dinakaran.

Tags : Union government ,Kanchipuram ,Kanchipuram district, ,India ,
× RELATED சாம்சங் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு...