×

திரிவேணி சங்கமம் கடற்கரையில் ராட்சத பள்ளம்: உயிர் பலி வாங்கும் அபாயம்

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் கோடை சீசன் களைகட்ட தொடங்கியுள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் திரிவேணி சங்கமத்தில் குளிக்கவும், கடற்கரையில் அமர்ந்து கடல் அலையை ரசிக்கவும் சுற்றுலாபயணிகள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். திரிவேணி சங்கமத்தில் கடற்கரைக்கு இறங்கும் இடத்தில் மாவட்ட நிர்வாகம் தடுப்பு சுவர் கட்டியுள்ளது. இந்த தடுப்பு சுவரில் அலை மோதி செல்லும். இதனால் சுற்றுலா பயணிகள் இந்த சுவரில் அமர்ந்து அலையை ரசிப்பர். ஆனால் இந்த சுவரின் அருகில் மிகப்பெரிய ராட்சத பள்ளம் உருவாகியுள்ளது. அலை சுவரில் மோதுவதால் சிறிது சிறிதாக அரிக்கப்பட்டு சுவருக்கு கீழ் உள்ள மண்ணை தண்ணீர் இழுத்து சென்றுவிட்டது.

இதனால் சுவரின் மறு பக்கத்தில் பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. சுவரின் கீழ் உள்ள மண் அரிக்கப்பட்டதால் தற்போது சுவர் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இதனால் சுவர் எந்த நேரத்திலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இங்கிருக்கும் ஆபத்தை அறியாத சுற்றுலா பயணிகள் வழக்கம்போல் சுவரில் அமர்ந்து கடல் அலையை ரசிக்கின்றனர். அதிகமானோர் அமர்ந்திருக்கும்போது சுவர் இடிந்து விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. இதே போல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த பகுதியில் பெரிய பள்ளம் உருவாகி இருந்தது. பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் பலமுறை கோரிக்கை விடுத்தும் மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் வியாபாரிகள் தாமாக முன் வந்து மண், ஜல்லி ேபான்றவற்றை கொட்டி பள்ளத்தை நிரப்பினர். இந்த நிலையில் மீண்டும் பள்ளம் தோன்றியிருக்கிறது. தற்போதும் அதிகாரிகள் அலட்சியமாகவே இருந்து வருகின்றனர். சுவர் இடிந்து விழுந்து பேராபத்து ஏற்படுவதற்கு முன்பு மாவட்ட நிர்வாகமும், சுற்றுலாத்துறையும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு திரிவேணி சங்கமம் கடற்கரையில்  ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளத்தை உடனடியாக சரி செய்ய வேண்டும். இதுபோல் மீண்டும் பள்ளம் ஏற்படாத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED சொல்லிட்டாங்க…