×

ஏழைகளுக்கான அரசின் பயன்களை வசதிபடைத்தோருக்கு வழங்கும் அவலம்

தமிழகத்தில் உணவு பொருள் வழங்கல் துறை மூலம் அங்காடிகள், பெரிய மற்றும் சிறிய மளிகை கடைகள் போன்றவற்றில் உணவுத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். அங்கு விற்கப்படும் பொருட்களின் தரம், அளவு, பொருள்கள் காலாவதியாகி விட்டனவா, விற்கப்படும் பொருட்கள் எவை? என பார்க்க வேண்டும். இதற்கு அதிகாரம் இருந்தும் அதை செயல்படுத்துகிறார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது. காரணம், கையில் காசு பார்க்கும் உணவுத்துறை அதிகாரிகள் இதுபற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மண்டல உணவு பொருள் உதவி ஆணையர் அலுவலகம் செயல்படுகிறது. குறிப்பாக சென்னையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியாக மண்டல உணவு பொருள் உதவி ஆணையர் அலுவலகம் உள்ளது. இதில் சைதாப்பேட்டை, மயிலாப்பூர், ஆயிரம்விளக்கு, தி.நகர், வில்லிவாக்கம் போன்ற மண்டல உதவி ஆணையர்கள் ரேஷன் கடை பணியாளர்களை மிகவும் கேவலமான நிலையில் நடத்துகின்றனர். குறிப்பாக சைதாப்பேட்டை உதவி ஆணையர் மற்றும் களப்பணியாளர்கள் தவறுகள் செய்துவிட்டு அந்த பழியை ரேஷன் கடை ஊழியர்கள் மீது திணிக்கின்றனர். காரணம், வெறுமனே விசாரணை மட்டும் செய்து ஸ்மார்ட் கார்டு (குடும்ப அட்டை) வழங்கினால் மட்டும் போதும் என்ற உணர்வில்தான் செயல்படுகின்றனர். இவர்கள் தனியார் கடை பக்கம் ஆய்விற்கு திரும்பிக் கூட பார்ப்பது கிடையாது. ரேஷன் கடை மட்டும் தான் அவர்களின் பார்வைக்கு தெரிகிறது. ஆய்வு மட்டும் இவர்கள் வேலை இல்லை. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை எடையிட்டு சமச்சீர் செய்து எடை குறையாமல் ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறதா? என்று கண்காணிப்பதும் இவர்கள் வேலைதான். ஆனால், இதை கண்காணிப்பதே இல்லை. ஆனால் ரேஷன் கடைகளில் மட்டும் 3 கிலோ குறைந்து விட்டால், இந்த உணவுத்துறை அதிகாரிகள் திடீர் விசிட் செய்து குறைந்த பொருட்களுக்கு மூன்று மடங்கு, நான்கு மடங்கு அபராதம் விதிக்கின்றனர்.ரேஷன் கடைக்காரர்களை திருடனாகவே பாவித்து ஆய்விற்கு செல்லும் இவர்கள் ரேஷன் கடையின் பொருட்களை எல்லாம் களைத்துபோட்டு, எதுவும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என காலி கோணிப்பைகள் உள்ளிட்டவைகளையும் பிரித்து பார்க்கின்றனர். இதில், ஆயிரம்விளக்கு, வில்லிவாக்கம், தி.நகர். மயிலாப்பூர் பகுதி உதவி ஆணையர்கள் நாட்டாமைபோல் நடந்து கொள்கின்றனர். ஆனால் கிடங்கு பக்கம் தலைகாட்டுவதே இல்லை. அங்கு எடை போட்டால் உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் வட்டாரம் இவர்களை சும்மா விடாது என்ற பயம். இவர்களுக்கு ரேஷன் கடைக்காரர்கள்தான் ஏமாளிகளாக தெரிகிறார்கள். மேலும், தற்போது ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் முறையில் கைரேகை பெற்று பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் போலி பில்கள் போடப்பட்டுள்ளது என சைதாப்பேட்டை உதவி ஆணையர் உள்ளிட்ட அனைத்து மண்டல அதிகாரிகளும் ரேஷன் கடைக்காரர்கள் மீது அபராதம் விதிக்கின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், பொதுமக்களிடம் இருந்து வரும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். பொதுமக்கள் தாங்கள் வாங்காத பொருட்களுக்கும் வாங்கியதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது அல்லது ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கிய பொருட்களில் எடை குறைவு உள்ளிட்ட குறைகள் இருந்தால் 107 என்ற புகார் எண்ணுக்கு பேசலாம். ஆனால் பயோமெட்ரிக் அறிமுகப்படுத்தியுள்ளதால் எந்த தவறும் ரேஷன் கடைகளில் நடக்க வாய்ப்பு இல்லை. அப்படியென்றால் பயோமெட்ரிக் முறையை அதிகாரிகள் ஏற்க மறுக்கிறார்களா? ரேஷன் கடை ஊழியர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்பதற்காக, மண்டல அதிகாரிகள் களப்பணியாளர்களை ஏவிவிட்டு, கார்டுதாரர்களின் வீட்டிற்கே சென்று அவர்களிடம் என்ன பொருள் பெற்றீர்கள்? என கேள்வியும் கேட்டு, பதிலும் இவர்களாகவே பெற்று வந்து குறிப்பிட்ட ஒரு தொகையை அபராதமாக நிர்ணயித்து விடுகிறார்கள். இப்படி தண்டனை வழங்கும்போது, சம்பந்தப்பட்ட புகார்தாரரின் விவரம் ரேஷன் கடை ஊழியர்களுக்கு தரப்பட வேண்டும். ஆனால் இந்த விதிமுறைகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இந்த சட்டமீறலை இனியும் ரேஷன் கடை ஊழியர்கள் அனுமதிக்கப்போவதில்லை. ரேஷன் கடைக்கு வரும் கட்டுப்பாட்டு பொருட்கள் சரியான எடையில் வர வேண்டும். மண்ணெண்ணெய் வழங்கிடும் முகவர்கள் பாரல் ஒன்றிற்கு (200 லிட்டர் அல்லது நூறு லிட்டர்) 3 முதல் 6 லிட்டர் வரை குறைத்து வழங்குவதை தடுத்திட வேண்டும். மயிலாப்பூர் உதவி ஆணையர் அலுவலக கண்காணிப்பில் உள்ள மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களில் தெரிந்தவர்களுக்கு சரியான ஒதுக்கீடும், கேள்வி கேட்கும் தொழிலாளர்கள் பணி செய்து வரும் ரேஷன் கடைகளுக்கு குறைந்த அளவு மண்ணெண்ணெயும் ஒதுக்கீடு வழங்க வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளை சைதாப்பேட்டை உள்ளிட்ட அனைத்து உதவி மண்டல அதிகாரிகள் சரி செய்யவில்லையென்றால் அனைத்து மண்டல உணவு துறை அதிகாரிகளை கண்டித்து சைதாப்பேட்டை உதவி ஆணையர் அலுவலர் முன் ரேஷன் கடை ஊழியர்கள் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரசு வழங்கிடும் உதவிகள் கிடைத்திட பிஎச்எச் மற்றும் ஏஏஒய் என இரு வகையான குடும்ப அட்டைகள் வழங்க வேண்டிய உதவி ஆணையர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் வீடு, வீடாக போய் அவர்கள் உண்மையான பயனாளிகள் தானா? என்று கண்டறியாமல், அதிகாரிகள் அலுவலகத்தில் ஏசி அறையில உட்கார்ந்து ஒரு பட்டியல் தயார் செய்ததின் விளைவாக இன்று கார், பங்களா என வசதிபடைத்தவர்களும் வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்கிறார்கள் என்ற குடும்ப அட்டைகளை வைத்து அரசின் பயன்களை இலவசமாக அனுபவித்து வருகின்றனர். உண்மையான ஏழைகளுக்கு உதவித்தொகை கிடைக்காமல் புறக்கணிக்கப்படுகிறார்கள். இது, `தான் திருடி பிறரை நம்பாது’ என்று சொல்வதுபோல் இந்த அதிகாரிகள் நடவடிக்கைகள் உள்ளது. இப்படி அரசை ஏமாற்றும் உணவுத்துறை அதிகாரிகளின் மீது அடுத்து அமையப்போகும் திமுக அரசின் மூலம் துறை ரீதியான சட்ட நடவடிக்கை எடுத்திட இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தவும் திட்டமிட்டுள்ளோம்….

The post ஏழைகளுக்கான அரசின் பயன்களை வசதிபடைத்தோருக்கு வழங்கும் அவலம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,
× RELATED நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின்...