×

எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியது அம்பலம்

* பிரபல மருத்துவமனை டாக்டரிடம் ரூ.70 லட்சம் பறித்த விவகாரத்தில் புதிய தகவல்* கைதான சசிகுமாரை காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் முடிவுசென்னை: பிரபல மருத்துவமனை டாக்டரிடம் ரூ.70 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார், தான் ஐஏஎஸ் அதிகாரி என்று நம்பவைத்து தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளிடம் மருத்துவ சீட்டு வாங்கி தருவதாக பல கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.  சென்னை போரூரில் உள்ள பிரபல மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் செல்வகுமார் (69) என்பவர் ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், சேலத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார்(46) என்பவர் தன்னை தேசிய மருத்துவ ஆணையரத்தின் உறுப்பினராக பதவி வாங்கி தருவதாக ரூ.70 லட்சம் பணம் பெற்று மோசடி செய்து விட்டதாக புகார் அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்திப் ராய் ரத்தோர் எஸ்ஆர்எம்சி உதவி கமிஷனர் ராஜூவ் பிரின்ஸ் ஆரோனுக்கு உத்தரவிட்டார். அதன்படி உதவி கமிஷனர் விசாரணை நடத்தினார். சேலம் மாவட்டம் வாழப்பாடி தாலுகா தும்பல் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார். போலி ஐஏஎஸ் அதிகாரியான இவர் மீது, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 9க்கும் மேற்பட்ட மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் சசிகுமார் மற்றும் மோசடிக்கு உடந்தயாக இருந்த முன்னாள் காவலர் நடராஜன்(48) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் ரொக்கம், 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. போலி ஐஏஎஸ் அதிகாரி சசிகுமார் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும், எம்பிபிஎஸ் சீட் வாங்கி கொடுப்பதாக பல கோடி வரை பணம் வாங்கி மோசடி செய்துவிட்டதாக தொழிலதிபர்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள் வரை பலர் புகார் அளித்து வருகின்றனர். தொடர் புகார் எதிரொலியால் சசிகுமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த எஸ்ஆர்எம்சி போலீசார் முடிவு செய்துள்ளனர். அதற்கான பணிகளை போலீசார் தற்போது செய்து வருகின்றனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட பிறகு சசிகுமாரிடம் நடத்திய விசாரணையின் போது, பல அதிர்ச்சி தகவல்கள் போலீசாருக்கு தெரியவந்துள்ளது. அதுகுறித்து போலீசார் கூறியதாவது:   கைது செய்யப்பட்ட சசிகுமார், தான் ஐஏஎஸ் அதிகாரி என்று கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தொழிலதிபர்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள் வரை பலரிடம் கூறி பெரிய அளவில் மோசடி செய்து வந்துள்ளார். மோசடிக்காகவே ஒன்றிய அரசின் செயலாளர்களுடன் ஒன்றாக போட்டோ எடுத்து அதை தனது வீட்டில், தன்னை பார்க்க வரும் நபர்கள் கண்ணில் தெரியும்படி மாட்டி வைத்துள்ளார். தான் போலி ஐஏஎஸ் அதிகாரி என்று யாருக்கும் சந்தேகம் வராதபடி விரும்பாக்கம் பகுதியில் உள்ள ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி வீட்டை ரூ.60 ஆயிரத்திற்கு மாத வாடகைக்கு எடுத்து சசிகுமார் வசித்து வந்துள்ளார்.  டெல்லி ஐஏஎஸ் அதிகாரி என்று அருகில் குடியிருக்கும் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளிடமே கூறி அனைவரையும் ஏமாற்றியுள்ளார். ஒன்றிய அரசு முத்திரை பதித்த கார்களில் தான் வலம் வருவார். சசிகுமார் வீட்டிற்கு வந்தாலே தொழிலதிபர்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள் வரை நள்ளிரவு பல மணி நேரம் காத்திருந்து சந்தித்துவிட்டு செல்வார்கள். அந்த அளவுக்கு சசிகுமார் தன்னை ஐஏஎஸ் குடியிருப்பில் அடையாளப்படுத்தி வந்துள்ளார். இதனால் யாருக்கும் சசிகுமார் மீது சந்தேகம் வரவில்லை.  தூத்துக்குடி எஸ்பி வீட்டை வாடகைக்கு எடுத்த பிறகு தான் சசிகுமார் தேசிய மருத்துவ ஆணையத்தில் உயர் அதிகாரிகள் தெரியும் என்று பலரிடம் ஒரு எம்பிபிஎஸ் சீட்டிற்கு ரூ.50 லட்சம் முதல் ரூ.2 கோடி வரை பணம் பறித்துள்ளார். அந்த வகையில் இதுவரை குறைந்தபட்சம் ரூ.100 கோடிக்கு மேல் சசிகுமார் மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. பணம் கொடுத்த பெரும்பாலான நபர்கள் தொழிலதிபர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் என்பதால், மோசடி செய்த சசிகுமார் மீது யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. இது சசிகுமாருக்கு சாதகமாக அமைந்துவிட்டது. சசிகுமார் பணத்தை ரொக்கமாகதான் வாங்குவார். ஆன்லைன் மூலம் மற்றும் வங்கி காசோலைகள் மூலம் பணம் வாங்கமாட்டார். இதற்காகவே பலரை புரோக்கர்களாக வைத்து மோசடி செய்து வந்துள்ளார். சில ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கு உயர் பதவி வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பணத்தை வாங்கியுள்ளார். பணம் கொடுக்கும் உயர் அதிகாரிகளிடமே உங்கள் வேலையாக நான் டெல்லி செல்ல வேண்டும் என்று கூறி அவர்கள் மூலம் விமான டிக்கெட் எடுக்க கூறி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.  தமிழகம் முழுவதும் சசிகுமார் மீது மோசடி வழக்குகள் உள்ளன. சசிகுமாரை 5 மோசடி வழக்குகளில் போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் சசிகுமாரை அவர்களால் பிடிக்க முடியவில்லை. அதேநேரம் போரூர் பிரபல மருத்துவமனை டாக்டர் செல்வகுமாரிடம் ரூ.70 லட்சம் மோசடி வழக்கில் ஒரு மாதம் பின் தொடர்ந்து பல தகவல்களை சேகரித்த பிறகு தான் நேற்று முன்தினம் சசிகுமாரை நாங்கள் கைது செய்தோம். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.*அறை நிறைய கோட் சூட்சசிகுமார் தொழிலதிபர்கள் வசித்து வரும் ‘மெட்ரோ ஸோன்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2,500 சதுரடி பரப்பளவு கொண்ட வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த குடியிருப்புக்குள் சென்று சசிகுமார் வீடு எங்குள்ளது என்று கேட்டால் ஐஏஎஸ் அதிகாரி வீடுதானே என்று கூறும் அளவுக்கு சசிகுமார் அனைவரிடமும் பழகி வந்துள்ளார். மோசடி வழக்கில் சசிகுமார் கைது செய்யப்பட்டதால் அவரது வீட்டை போலீசார் சோதனை நடத்தினர். வீட்டில் விலை உயர்ந்த பொருட்கள், தனி அறையில் பல கலர்களில் 50க்கும் மேற்பட்ட விதவிதமான ‘கோட் சூட்’கள், அந்த கோட் சூட்டில் ஒன்றிய அரசின் முத்திரையான சிங்கம் பதித்த எம்பளம் கோல்டன் கலரில் பதித்து வைத்துள்ளார்….

The post எம்பிபிஎஸ் சீட் வாங்கி தருவதாக தொழிலதிபர்கள், அரசு அதிகாரிகளிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியது அம்பலம் appeared first on Dinakaran.

Tags : MBBS ,Sasikumar ,Dinakaran ,
× RELATED 300 முறை தோப்புக்கரணம் போட வைத்து...