×

போலீஸ் காவலில் அமமுக நிர்வாகி சாவு : தஞ்சை மருத்துவமனை முன்பு சாலை மறியல்

தஞ்சை: போலீஸ் காவலில் இருந்தபோது நெஞ்சுவலிப்பதாக தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அமமுக நிர்வாகி இறந்தார். போலீசார் தாக்கியதால் இறந்ததாக மருத்துவமனை அருகே கட்சியினர், உறவினர்கள் சாைல மறியலில் ஈடுபட்டனர்.தஞ்சை மாவட்டம் மதுக்கூர் அருகே உள்ள பழவேற்காடு கிராமத்தை சேர்ந்தவர் குமாரசெல்வன் (50). அதிமுக சார்பில் போட்டியிட்டு 2 முறை ஊராட்சி தலைவராக இருந்துள்ளார். தற்போது அமமுகவில் மாநில பொதுக்குழு உறுப்பினராக இருந்தார். கடந்த 11ம் தேதி இதே கிராமத்தில் நடந்த ஒரு துக்க நிகழ்ச்சியில் குமாரசெல்வன், இவரது தம்பி சிவக்குமாரன் (43) ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, பாலமுருகன் (44) என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் சகோதரர்கள் 2 பேரும் சேர்ந்து பாலமுருகனை தாக்கினர்.
இதுகுறித்து மதுக்கூர் போலீசில் பாலமுருகன் புகார் செய்தார். புகாரின்பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து கடந்த 16ம் தேதி சிவக்குமாரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மறுநாள் குமாரசெல்வனை கைது செய்து மதுக்கூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போது தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறினார். உடனே அவரை பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை 3 மணிக்கு குமாரசெல்வன் இறந்தார். இதுகுறித்து மதுக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் குமாரசெல்வனின் மனைவி மாலா நேற்று புகார் மனு அளித்தார். அதில், போலீசார் தாக்கியதால்தான் குமாரசெல்வன் இறந்துள்ளார். எனவே மதுக்கூர் ஒன்றிய அதிமுக செயலாளர் துரை.செந்தில், இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம், எஸ்ஐ மகேந்திரன், போலீஸ் பெருமாள் மற்றும் 2 போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில் குமாரசெல்வன் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசு மருத்துவமனை முன்பு தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ ரங்கசாமி, அமமுக மாவட்ட செயலாளர் சேகர் மற்றும் கட்சியினர், உறவினர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags : ammk, ttv dinakaran, chest pain
× RELATED டெல்டா மற்றும் தென் கடலோர...