×

தனியார் பள்ளிகளுக்கு இணையாக மாணவர்களின் சீருடையில் மாற்றம் கொண்டுவந்தால் மட்டும் கல்வி வளராது : ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு அறிக்கை

சென்னை: தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக மாணவர்கள் அணியும் ஆடையை மாற்றினால் மட்டும் கல்வி வளராது என்று ஜாக்டோ- ஜியோ  கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தனியார் பள்ளிகளில் படிக்கும்  மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களுக்கு சீருடையில் மாற்றம் கொண்டு வந்துள்ளோம் என்று முதல்வர் கூறியிருப்பதை  ஏற்பதற்கில்லை இந்த ஆடைகள் பெரும்பாலும் அந்நிய கலாசாரத்தை வளர்க்கும் வகையில்தான் அமைந்துள்ளன. ஆள்பவர்கள் தமிழர்கள்தான் என்பது  உண்மையானால் தமிழை, தமிழ் கலாசாரத்தை அழிக்கும் நடவடிக்கைகளை தடைசெய்ய வேண்டும். அரசு நினைப்பதுபோல் ஆடையை மாற்றினால்  மட்டும் கல்வி வளராது.

பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்தினால்தான் கல்வி வளரும் வளர்ந்து விட்ட மேலைநாடுகளில் 10 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்  என்ற நிலை உள்ளது. எல்லாம் அறிந்த மாணவர்கள் பயிலும் தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலைதான்  உள்ளது. பள்ளிக்கல்வி முதன்மைச் செயலாளராக திறம்படப் பணியாற்றிய உதயசந்திரன் இன்றைய தமிழக அரசால் ஓரங்கட்டப்பட்டு பள்ளிச்செயலராக  ‘டம்மி’யாக்கப்பட்டதும், பள்ளிக் கல்வி முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டதும் ஏன் எனக் கல்வித்துறையிலுள்ள அனைவரும்  அறிவர்.

பள்ளிக்கல்விச் செயலாளர் உதயசந்திரன் தலைமையிலான குழு உலகத்தரம் வாய்ந்தப் பாடத்திட்டத்தை உள்ளடக்கிய வகுப்புவாரியான புத்தகங்களை  தயாரித்தளித்திருப்பது பாராட்டிப் போற்றுதற்குரியதாகும். 2013, 2017 களில் தகுதித் தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று, பணிக்காகக் காத்திருப்போர்களை  பதிவுமூப்பு அடிப்படையில் பணிநியமனம் செய்து கல்வியை வளர்த்திட முன்வர வேண்டும். இவ்வாறு ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Tags :
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...