×

எட்டயபுரத்தில் போதை வாலிபர்களால் தொடரும் மறியல் பயணிகள் பாதிப்பு

எட்டயபுரம். ஆக. 18: எட்டயபுரத்தில் போதை வாலிபர்கள் உருவாக்கும் பிரச்னையால் அடிக்கடி சாலைமறியல் நடக்கிறது. இதனால் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எட்டயபுரத்தில் கடந்த சில மாதங்களாக மாலை நேரங்களில் போதையில் வாலிபர்களுக்கு இடையே ஏற்படும் தகராறு பொது பிரச்னையாகி சாலையை மறிக்கும் நிலைக்கு செல்கிறது. இதனால் அடிக்கடி மணிக்கணக்காக சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் காத்துக் கிடக்கின்றன. இதன் காரணமாக உரிய நேரத்தில் செல்ல வேண்டிய அரசு, தனியார் பேருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப்பாதையில் சிரமத்துடன் செல்ல வேண்டியுள்ளது. எட்டயபுரம் காவல் நிலையம், நகரில் இருந்து 1 கிமீ தூரத்தில் தூத்துக்குடி – மதுரை பைபாஸ் சாலையில் உள்ளதால் நகருக்குள் போதை ஆசாமிகள் எந்தவித அச்சமும் இன்றி பிரச்னையில் ஈடுபடுகின்றனர். போலீசார் தகவலறிந்து சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்லும் முன் போதை ஆசாமிகள் எஸ்கேப் ஆகிவிடுகின்றனர். இதனால் ஆவேசமடையும் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபடுவதால் சாதாரண பிரச்னை பெரிதாக்கப்படுகிறது.

கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தூத்துக்குடி சாலையில் பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியில் சமுதாய தலைவர் படத்தை போதை ஆசாமிகள் அவமானப்படுத்தியதால் ஏற்பட்ட பிரச்னையால் பல மணி நேரம் சாலைமறியல் நடந்தது. எஸ்பி வந்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகுதான் முடிவுக்கு வந்தது. அதேபோல் நேற்று முன்தினம் போதையில் காரில் சென்ற 4 வாலிபர்கள் ஏற்படுத்திய பிரச்னையால் கோவில்பட்டி – தூத்துக்குடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற எட்டயபுரம் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார். எனவே இனிவரும் காலங்களிலாவது போதை வாலிபர்களால் ஏற்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க எட்டயபுரம் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பேருந்து நிலையத்தில் புறக்காவல் நிலையம்
எட்டயபுரம், நடுவிற்பட்டி, கான்சாபுரம் என 3 உட்பிரிவுகள் கொண்ட அதிக பரப்பளவு கொண்ட நகரமாக உள்ளது. காவல் நிலையம், தூத்துக்குடி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. மேலும் காலை, மாலை நேரங்களில் கூட போலீசார் ஊருக்குள் ரோந்து செல்வதில்லை. ஏதாவது விபத்து அல்லது பிரச்னை என தகவல் கிடைத்தால் மட்டும் சம்பவ இடத்திற்கு செல்லும் நிலை உள்ளது. இது போதை ஆசாமிகளுக்கும், பிளாக்கில் மதுபானம் விற்பவர்களுக்கும் ஏதுவாகிறது. இதனை தடுக்க எட்டயபுரம் பஸ் நிலையத்தில் புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும். அதுவரை காலை, மாலை நேரங்களில் பஜாரில் போலீசார் ரோந்து பணியை அதிகப்படுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

The post எட்டயபுரத்தில் போதை வாலிபர்களால் தொடரும் மறியல் பயணிகள் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Ettayapuram ,
× RELATED இன்ஸ்டாகிராமில் பல ஆண்களுடன் தொடர்பு;...