×

எஞ்சிய சொத்துக்களை மீட்க சிறைப்பறவை திட்டமிட்டு வருவதை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘க ர்ப்பிணிகளுக்கான சாப்பாட்டிலுமா கொள்ளையடிப்பாங்க… கிராமம் என்பதால் முறைகேடு தெரியாது என்று நினைக்கிறாங்க போல…’’ என்று வேதனை தெரிவித்தார் பீட்டர் மாமா. ‘‘கர்ப்பிணிங்க சரியான நேரத்துல சாப்பிடணும், இந்த நோக்கத்துக்காகத்தான் மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வர்றாங்க. இதுல பரிசோதனைக்கு வர்ற கர்ப்பிணிங்க, மதியம் 12 மணி வரைக்கும் காத்திருக்க வேண்டிய நிலைமை இருக்கு. இதனால அந்த கர்ப்பிணிகளுக்கு சத்தான உணவு வழங்கணும். எனவே, கர்ப்பிணிகளுக்கான உணவு செலவுக்காக அரசு சார்புல ₹25 கொடுக்குறாங்க. இதுல வெயிலூர் மாவட்டம் மேல்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துல வாரந்தோறும் பரிசோதனைக்கு வர்ற கர்ப்பிணிகளுக்கு மதிய உணவு சரியாக கொடுக்கறதே இல்லையாம். 40 கர்ப்பிணிங்க பரிசோதனைக்கு வந்தா… 40 பேருக்கு உணவு வாங்குவது இல்லையாம். 20 மதிய உணவு மட்டுமே வாங்கிட்டு அதை பிரித்து 40 பேருக்கு பிரித்து கொடுத்துவிடுகிறார்களாம். இதுதொடர்பா டாக்டரிடம் கேட்டால், பதில் சொல்லாம எஸ்கேப் ஆகிறாராம். ஏழைங்க வயித்துல தான் அடிக்கிறாங்க என்றால்… கர்ப்பிணிங்க சாப்பாட்டுலேயும் பணத்தை சுருட்டுவது அபத்தமானது என்று அவர்களின் உறவினர்கள் வேதனை தெரிவிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘சிறைப்பறவையின் ‘சீக்ரெட்’ திட்டம் பற்றி சொல்லுங்களேன்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சிய மாவட்டத்தில் 2 நாள் தங்கியிருந்த சிறைப்பறவை, கணவரின் உறவினர்கள் மற்றும் முக்கிய உறவினர்களை நேரில் வரவழைத்து தனித்தனியாக ரகசிய ஆலோசனை நடத்தினாராம். தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் போக மீதமுள்ள சொத்துக்கள் எவ்வளவு உள்ளது, யார், யார் பெயரில் உள்ளது, அந்த சொத்துக்களை எப்படி மீட்பது, மீட்கப்படும் சொத்துக்களை எவ்வாறு பாதுகாப்பது குறித்தும் மணிக்கணக்கில் ஆலோசனை நடத்தப்பட்டதாம். இந்த ஆலோசனைக்கு இடையில் நெற்களஞ்சிய மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் குக்கர் கட்சி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், இலையின் முக்கிய நிர்வாகிகள் சிறைப்பறவையை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர். அப்போது அவர்களிடம் தேர்தல் நிலவரம் குறித்து விவரம் கேட்டறிந்த சிறைப்பறவை, தேர்தல் முடியட்டும் விரைவில் ஒரு நல்ல செய்தியை அறிவிப்பேன் என கூறி அனுப்பியதாக நெற்களஞ்சிய மாவட்ட இலை, குக்கர் நிர்வாகிகள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மெடல் மாவட்டத்தில் கொரோனா பெயரை பயன்படுத்தி கொள்ளையடித்த அதிகாரி பற்றிச் சொல்லுங்க…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘மெடல்’’ மாவட்டத்தின் உள்ளாட்சி அலுவலக அதிகாரியாக இருந்தவர் ‘‘பெருமாள் பெயர்’’ கொண்டவர். இவர் சமீபத்தில் இதே மாவட்டத்தின் பட்டாசு நகரத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறார். கொரோனா காலத்தில் ‘‘லோக்கலாக பர்ச்சேஸ்’’ செய்யும் அனுமதியைப் பயன்படுத்தி, சானிடைசர் துவங்கி பிளீச்சிங் பவுடர் வரையிலும் கொரோனா சார்ந்த பொருட்களை வாங்கிக் குவித்ததாக கூறி, சகட்டுமேனிக்கு ரூ.30 லகரங்கள் வரையிலும் நகட்டிக் கொண்டு போயிருக்கிறாராம். இருந்த நிதியெல்லாம் காணாமல் போக, இப்போது அலுவலகத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கு உரிய ஓய்வூதிய தொகையைக் கூட கொடுக்க முடியாத மோசமான நிலை ஏற்பட்டுள்ளதாம். ‘‘மெடல்’’ நகரத்தையே கலங்கடித்த பெருமாள், ‘‘பட்டாசு நகரத்தை’’ சும்மா விட்டு விடுவாரா என்ன என்று ஊழியர்களுடன், மக்களும் கலங்கிப்போயிருக்கிறார்களாம். ‘‘அமமுக தேர்தல்ல எப்பிடி வேலை செய்யுது..’’ ‘‘அது வேலை செய்யுதோ இல்லையோ,  அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி மட்டும் அவரை வச்சு செஞ்சுட்டு இருக்காரு..’’ என சிரித்தார் விக்கியானந்தா. ‘‘அப்படி என்னவாம்..’’ என ஆர்வமாக கேட்டார் பீட்டர் மாமா.  ‘‘சசிகலாவின் கருத்துக்கு மாறாக டி.டி.வி.தினகரன் ஆங்காங்கே வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். ஒரு குழப்பத்தை உண்டு பண்ணுவதற்காக இருப்பவருக்கு எப்படி மக்கள் வாக்களிப்பாளர்கள்? உங்க சித்தி சசிகலா சொன்னதை ஏற்று கொண்டு ஒதுங்கி போக வேண்டும். தற்போது ஆர்கே.நகரில் உள்ள ஒரு தெருவில் தினகரன் தனியாக போய் விட்டு வந்தால் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். ஆர்.கே.நகரில் வாக்களித்த மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாததால் டி.டி.வி.யால் தொகுதி பக்கமே போக முடியலை. பழைய தொகுதிகளான ஆண்டிபட்டி, தேனி பக்கமும் போக முடியலை. கடைசியா கோவில்பட்டி வந்துள்ளார். கோவில்பட்டி மக்களை ஏமாற்ற முடியாது’’னு சொல்லியிருக்கார்.  ‘‘கமலை பத்தியும் ஏதோ சொன்னாராமே..’’  ‘‘ஆமா..கமல் ஊழல் இல்லாமல் ஒரு ஆட்சி அமைக்க வேண்டும் என சொல்லி பிரசாரம் செய்து வருகிறார். ஆனால் அவரது கட்சி பொருளாளர் வீட்டில் அவ்வளவு பணத்தை எடுத்திருக்கிறார்கள். ஒருவேளை அது கமல் சம்பாதிச்ச பணத்துல பேலன்ஸ் ஆக இருக்கலாம்’’ என்று பேட்டி கொடுத்திருக்கிறார் என்றார் விக்கியானந்தா . …

The post எஞ்சிய சொத்துக்களை மீட்க சிறைப்பறவை திட்டமிட்டு வருவதை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Peter ,
× RELATED தென்மாவட்ட கொலை சம்பவங்கள் கதையில் அப்புக்குட்டி