ஊட்டி : ஊட்டி நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள எட்டின்ஸ் சாலை உள்ளிட்ட பல சாலைகள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச சுற்றுலா நகரமாக விளங்கி வருகிறது. இதனால், இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஊட்டி நகரம் மற்றும் வார்டு பகுதிகளில் தூய்மை பணிகள், வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட அனைத்தும் நகராட்சி மூலமாகவே மேற்கொள்ளப்படுகிறது. தற்போது ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை பராமாிப்பு உள்ளிட்ட அனைத்து விதமான மேம்பாட்டு பணிகளும் கடந்த சில ஆண்டுகளாகவே சுணக்கமடைந்துள்ளது. குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நகராட்சி சாலைகளை சீரமைக்க வேண்டும் என பலரும் வலியுறுத்திய போது, நகராட்சி நிதி ஆதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், சீரானதும் சரி செய்யப்படும் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது ஊட்டி நகராட்சி கடைகளுக்கான உயர்த்தப்பட்ட வாடகை விவகாரத்தில் பல நாட்களாக நிலுவையில் இருந்த வாடகை தொகை வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் ஊட்டி நகராட்சியின் நிதி நிலைமை சீரடைந்துள்ளது. இருப்பினும், சாலை சீரமைப்பு உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் சுணக்கம் அடைந்துள்ளது.குறிப்பாக, அரசு பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் சென்று வர கூடிய சேரிங்கிராஸ் துவங்கி ஏ.டி.சி. வழியாக பஸ் நிலையம் வரை உள்ள எட்டின்ஸ் சாலை சீரமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் ரோஜா கார்டன் செல்லும் சாலை சந்திப்பு, ஏ.டி.சி. உள்ளிட்ட பல பகுதிகளில் பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதுதவிர, சாலையின் நடுவே அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை தொட்டிகளின் மூடிகள் சேதமடைந்து காட்சியளிக்கிறது. இதனால், இரு சக்கர வாகன ஓட்டிகள் விழுந்து விபத்தில் சிக்கும் அபாயம் நீடிக்கிறது. எனவே, எட்டின்ஸ் சாலை உட்பட அனைத்து சாலைகளையும் நகராட்சி நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது….
The post ஊட்டி நகரில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் நகராட்சி சாலைகளால் வாகன ஓட்டிகள் அவதி-சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வலியுறுத்தல் appeared first on Dinakaran.