×

ஊட்டியில் மகளிர் தினவிழா கோலாகலம் கேக் வெட்டி பெண்கள் கொண்டாட்டம்

ஊட்டி : ஊட்டியில் நடந்த உலக மகளிர் தின விழாவில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறை மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பெண்கள் பூங்காவில் திரண்டனர். நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் நேற்று உலக மகளிர் தின விழா ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி  தலைமை வகித்தார். சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் மோனிகாரானே, சமூக நல அலுவலர் பிரவீனா, மருத்துவக் கல்லூரி டீன் மனோகரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தேவகுமாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவின், துவக்கமாக கேக் வெட்டப்பட்டது. தொடர்ந்து, மகளிர் தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், இசை நாற்காலி, நடை போட்டி உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. பழங்குடியின மக்கள் மற்றும், படுகர் இன மக்கள் ஆகியோரின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடந்தன. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் பாரம்பரிய உணவு திருவிழா நடந்தது. முதியோர் இல்லங்கள் மற்றும் மகளிர் திட்டம் மூலம் சுய உதவி குழு பெண்கள் தயாரித்த கைவினைப் பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்தது. படுகர் இன மக்களின் பாரம்பரிய நடன நிகழ்ச்சியின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷனி உட்பட அதிகாரிகள் பலரும் நடனமாடி அசத்தினர். இதனை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டு ரசித்தனர். தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சாதித்த பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல், கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மகளிர் தின விழாவை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் பணியாற்றும் பெண்கள், மகளிர் குழுக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் வரவழைக்கப்பட்டிருந்த நிலையில், தாவரவியல் பூங்கா நேற்று பெண்கள் கூட்டத்தால் களைகட்டியது….

The post ஊட்டியில் மகளிர் தினவிழா கோலாகலம் கேக் வெட்டி பெண்கள் கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Tags : Women's Day ,Kolakalam ,Ooty ,International Women's Day ,
× RELATED பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில்...